எரிச்சநத்தம் பகுதியில் செங்கரும்பு விளைச்சல் அதிகரிப்பு: அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் செங்கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்தாண்டை போல் அரசே செங்கரும்பை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் எரிச்சநத்தம், நடையனேரி, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் நிகழாண்டு சுமார் 5,000 ஹெக்டேரில் செங்கரும்பு விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல் இல்லாமல், நிகழாண்டு பருவமழை இல்லாதாதல் மோட்டார் பாசனத்தின் மூலமே செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. மேலும், சில விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்துவாங்கி விவசாயம் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நியாய விலை கடைகளில் பொங்கல் பொருள்கள் மற்றும் செங்கரும்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அதனால், விவசாயிகள் லாபத்தில் செங்கரும்புகளை விற்பனை செய்தனர். தற்போது, இதுவரை அரசு சார்பில் செங்கரும்பு கொள்முதல் செய்ய அலுவலர்கள் யாரும் விவசாயிகளை அனுகவில்லை. அதனால், மொத்த வியாபாபரிகள், 10 கரும்பு கொண்ட கட்டு ஒன்றை ரூ.100, முதல் 150 வரை விலைக்கு கேட்பதாக கூறப்படுகிறது. இதனால், செலவு செய்த தொகை கூட கிடைக்காத நிலையிருப்பதாக செங்கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.

எனவே, செங்கரும்பு விற்பனைக்கு உரிய விலை கிடைக்க, கடந்தாண்டை போல் அரசே செங்கரும்பை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter