நெற்பயிரில் இலைக் கருகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

நெற்பயிரில் பாக்டீரியா இலைக் கருகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள பெருகவாழ்ந்தான் கிராமத்தில் காவிரி ரெங்கநாதன் என்பவரது நெல் வயலில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ரெ.பாஸ்கரன், ராஜா.ரமேஷ், அ.காமராஜ், கோட்டூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரவீந்திரன் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

பின்பு அவர்கள் கூறியது: தற்போது ஆங்காங்கே நிலவி வரும் இரவு நேர குறைந்த வெப்பநிலை மற்றும் காற்றில் காணப்படும் 90 சதவீதத்துக்கு அதிகமான ஈரப்பதம் ஆகிய காரணிகளால் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிரில் பாக்டீரியா இலைக் கருகல் நோய் தாக்குதல் பரவலாகத் தென்படுகிறது.
பாசன நீர் மூலமாகவும், மழை நீர் பாதிக்கப்பட்ட பயிரின் மேல் விழுந்து அதன் மூலம் மற்ற பயிர்களுக்கும் பரவி விடும். மேலும் பெருங்காற்று வீசும்போது பயிர்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் உண்டாகும் சிறிய காயத்தின் மூலமாக இந்த பாக்டீரியாவானது எளிதாகப் பரவக்கூடியது.

பாக்டீரியா இலைக் கருகல் நோயின் அறிகுறிகள்:

இலையின் ஓரங்களில் வட்ட வடிவ மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி, இலை முழுவதும் மஞ்சள் நிறமாகி காய்ந்து உதிர்ந்துவிடும். வளர்ந்த பயிர்களில் இதன் தாக்குதல் இலையின் நுனிப்பகுதி மஞ்சள் அல்லது வெளிறிய மஞ்சள் நிற நீரில் நனைந்த கீற்றுகளாக மாறத் தொடங்குவதில் ஆரம்பமாகி பின்பு அளவில் பெரிதாகி வைக்கோல் நிறமாகி, இறுதியில் பழுப்பு நிற காய்ந்த கோடுகளாக காட்சியளிக்கும். அதிகமான தாக்குதலுக்குள்ளான இலை முழுவதும் காய்ந்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

இந்நோய் தாக்கப்பட்ட இலைகளைப் பறித்து அழித்துவிட வேண்டும். நோய் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து  அருகிலிருக்கும் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சக் கூடாது. நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடனே 20 சத பசுஞ்சாணக் கரைசல் தெளிக்க வேண்டும். இதற்கு ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதனை வடிகட்டி பெறப்படும் தெளிந்த கரைசலுடன் மேலும் 100 லிட்டர் தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும் அல்லது ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ரா சைக்ளின் கலவை 120 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் மருந்து கலவையை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்றனர்.

Newsletter