மஞ்சூர் வனப் பகுதியில் மலை நெல்லிக்காய் சீசன் தொடக்கம்

மஞ்சூர் வனப் பகுதியில் மலை நெல்லிக்காய் சீசன் தொடங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, மலைத் தோட்டக் காய்கறிகள் மட்டுமின்றி பல்வேறு அரிய வகை பழ வகைளும் உள்ளன. இதில், அரிய வகை மலைப் பழங்களான பிளம்ஸ், பிச்சர்ஸ், கொய்யா, மாதுளை, சீதாப்பழம், லங்கூட், மலை நெல்லிக்காய், ஆரஞ்ச், விக்கி, பேரிக்காய் உள்ளிட்ட 50-க்கும் மேற்ப்பட்ட பழ வகைகள் உள்ளன. தற்போது மஞ்சூர், கெத்தை பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தை ஒட்டியுள்ள சாலையோரங்களில் மலை நெல்லிக்காய் அதிகளவில் காய்த்துள்ளது.

தற்போது அழிந்து வரும் பழப் பட்டியலில் மலை நெல்லிக்காயும் ஒன்று. இப்பழம் குடியிருப்பு, விளை நிலம், தேயிலைத் தோட்டம் உள்ளிட்டப் பகுதியில் அதிக அளவில் பயிரிடப்படுவதில்லை.  இந்தப் பழத்தில் பல்வேறு மருத்தவ குணங்கள் நிரம்பி உள்ளன. ஒரு பழத்தில் இருந்து 650 முதல் 700 மில்லி கிராம் உயிர்ச்சத்து வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும், மலை நெல்லியில் கூடுதலாக பொட்டாஷ் சத்தும் உள்ளது.

தற்போது ஒட்டுரக நெல்லிக்காய் சந்தையில் கிடைக்கும் நிலையிலும், இயற்கைச் சூழலில், ரசாயனக் கலப்பின்றி வனத்திலிருந்து கிடைக்கும் மலை நெல்லி மருத்துவக் குணம் நிறைந்ததாகும். இனிப்புச் சுவை குறைந்து, துவர்ப்பு அதிகரித்துக் காணப்படும். வருடத்தில் 8 மாதங்கள் பூவுடன் காணப்படும் இதில் தேன் அதிக அளவு கிடைக்கிறது.

அதிக அளவு மகசூல் கிடைக்கும் இந்த மலை நெல்லிக்காய்களை வனப் பகுதியில் அரிதாக, எங்கோ ஒரு மூலையில் காணும் நிலையே தற்போது நிலவி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் காட்டுத் தீயாகும். அழிந்து வரும் மலை நெல்லிக்காய் எண்ணிக்கையை அதிகரிக்க தோட்டக்கலைத் துறையினர் மென் திசு ஒட்டு முறையில் கன்றுகள் தயார் செய்கின்றனர். மருத்துவ குணம் நிறைந்துள்ள மலை நெல்லிக்காய் மரங்களைப் பாதுகாத்து ஊக்குவிக்க வனத் துறை முயற்சித்தால் இயற்கை கொடுத்த உயிர்ச்சத்து அனைவருக்கும் கிடைக்கும்.

இதுகுறித்து, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது:

நெல்லிக்காய் உடலுக்கு இளமை தரும் ஓர் ஒப்பற்ற கனியாகும். நெல்லியை, வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என்று கூறுகின்றனர். இதில், பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக  பயன்படுத்தப்படுகிறது. இதில், வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. பல் நோய், அஜீரணம், மூட்டுவலி, பார்வைக் குறைபாடு, பசியின்மை, மலச்சிக்கல், மாதவிடாய், மூல நோய், பெண்களின் கர்ப்பப்பைக் கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கு இது அருமருந்தாகும் என்றார்.

Newsletter