கடும் வறட்சியால் கருகும் நெற்பயிர்கள்

நாகை மாவட்டத்தில் நீடித்து வரும் கடும் வறட்சியின் காரணமாக நெற்பயிர்கள் முளைப்புப் பருவத்திலேயே காய்ந்து, கருகி வருவது நிகழாண்டின் சம்பா நெல் சாகுபடி விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ளது.

நாகை மாவட்டத்தில் நிகழாண்டு சம்பா, தாளடி பருவத்தில் 1,34,500 ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் எனக் கருதப்பட்டது. காவிரி நீர் பாசனத்தில் விவசாயிகளுக்குப் பெரிய அளவில் நம்பிக்கை இல்லாததால், நிகழாண்டில் நேரடி நெல் விதைப்புப் பணிக்கு ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக,  நாகை மாவட்டத்தில் 73,584 ஹெக்டேரில் சம்பா நேரடி நெல் விதைப்புப் பணிகளும், 18,948 ஹெக்டேரில் பாரம்பரிய நடவுப் பணிகளும் நடைபெற்றுள்ளன. இதில், சுமார் 60 சதவீதத்துக்கும் அதிகமான நெல் பயிர்கள் காய்ந்து, கருகத் தொடங்கியுள்ளன.

நாகை மாவட்டத்தில் நவம்பர் மாத இயல்பு மழையளவு 476.68 மி. மீ. ஆனால், நிகழாண்டில் நவ. 29-ஆம் தேதி வரை பெய்த மழையளவு 116.3 மி.மீ மட்டுமே. சராசரி மழை அளவை விட 360.35 மி.மீ. மழை குறைவாகவே பெய்துள்ளது.  மாவட்டத்துக்கு நவம்பர் மாதம் வரை கிடைக்க வேண்டிய மழையளவு 1,261.3 மி.மீ. நிகழாண்டில் நவம்பர் மாதம் வரை கிடைத்த மழையளவு 612.74 மி.மீ மட்டுமே. சராசரி மழை அளவை விட 648.56 மி.மீ மழை குறைவாகவே நிகழாண்டில் கிடைத்துள்ளது.  
காவிரி நீரும், வடகிழக்குப் பருவ மழையும் பொய்த்ததன் காரணமாக, நாகை மாவட்டத்தின் பெரும்பகுதியில் நெற்பயிர்கள் காய்ந்து, கருகத் தொடங்கியிருப்பது விவசாயிகளை விரக்தியின் விளிம்புக்குக் கொண்டுச் சென்றுள்ளது. வடிமுனைக் குழாய்களைக் கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்ட பகுதிகளிலும் நிலத்தடி நீர் இல்லாததால், இதேநிலை ஏற்படத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாகவே, ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியுள்ளன நிவாரணக் கோரிக்கைகள். இந்த நிவாரணக் கோரிக்கைகளுக்கு இதுவரை ஆறுதல் ஏதும் கிடைக்காத நிலையில், பயிர்க் காப்பீடு பிரிமியம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இதுவரை தீர்வு கிடைக்காதது விவசாயிகளின் விரக்தியை அதிகமாக்குவதாக உள்ளது.
தற்போது செயல்படுத்தப்படும் பிரதமரின் பயிர்க் காப்பீடு நிவாரணத் திட்டத்தில், விதைப்புப் பொய்த்தாலும், மழை வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பயிர்க் காப்பீடு இழப்பீடு கிடைக்க வழிவகை உள்ளது. ஆனால், தற்போதைய நிலையில், சுமார் 40 சதவீதத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயிர்க் காப்பீடு திட்டத்தில் இதுவரை இணையவில்லை எனக் கூறப்படுகிறது.

ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை விவசாயிகள் செலவு செய்த நிலையில், நெல் பயிர்கள் நிலத்திலேயே கருகி நிலைகுலையச் செய்திருப்பதும், மத்திய அரசின் பணப் பரிவர்த்தனை மாற்றத்தால் நீடித்து வரும் கடும் பணத்தட்டுப்பாடும்தான், பயிர்க் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் முழுமையாக இணையாததற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.  பயிர்க் காப்பீடு திட்டத்தில் பிரிமியம் செலுத்துவதற்கான கடைசி தேதி நவ.30 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலத்தை டிச. 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் அல்லது விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க் காப்பீடு பிரிமியத்தை மத்திய, மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், குறைந்தபட்ச ஆறுதலாவது கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

Newsletter