மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 76 விவசாயிகளுக்கு பயிர்க்கடன்: அமைச்சர் வழங்கினார்

தேனியில் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 76 விவசாயிகளுக்கு பயிர் கடன் ஆணைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு பயிர் கடன் ஆணைகளை வழங்கி அமைச்சர் பேசியது:

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு, மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கி, அதில் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் அனுமதிக்கப்பட்ட பயிர்க் கடன் தொகையை வரவு வைத்து வாரம் ரூ.25 ஆயிரம் வீதம் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.   இதன்படி, மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 76 விவசாயிகளுக்கு இதுவரை மத்திய கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி, மொத்தம் ரூ.63.61 லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டுளளது என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆண்டிபட்டி தங்க.தமிழ்ச்செல்வன், கம்பம் எஸ்.டி.கே.ஜக்கையன், தேனி கே.கதிர்காமு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter