செய்யாறு பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகின: வயல்களில் மாடுகள் மேயும் அவலம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில், பருவமழை பொய்த்ததாலும், நீர்நிலைகள் வறண்டதாலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், விவசாயிகள் கண்ணீர் விடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தஞ்சைக்கு அடுத்து நெல் விளைச்சலுக்கு பெயர் பெற்றது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு. இப்பகுதி விவசாயிகள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்தது போல இந்த ஆண்டும் பருவமழை பெய்யும் என்று நம்பியும், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளை நம்பியும் இரண்டாம் போக சம்பா இறவை சாகுபடியை தொடங்கினர். இதில், வெள்ளைப் பொன்னி, கோ-51, ஏடிடீ-045, 043 ஆகிய நெற்பயிர்களை அதிக அளவில் பயிரிட்டனர். சில பகுதிகளில் 6 மாத காலப் பயிரான பொன்னியும் பயிரிடப்பட்டன.

ஆனால், இந்த ஆண்டு பருவமழை பெய்யத் தவறியதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால், ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக பாசன நீரின்றி சம்பா பருவ நெல் பயிர்கள் கருகி, தீய்ந்து வருகின்றன. கருகிய நெற்பயிரை எல்லாம் மாடுகள் மேய்ந்து வருகின்றன. அதிலும், செங்கம்பூண்டி பகுதியில் கருகிய நெற்பயிரை மாடுகள் உண்ண மறுப்பதாகவும், அதனை வைக்கோலாகக் கூட பயன்படுத்த முடியவில்லை என்றும் விவசாயிகள் கண்ணீருடன் கவலை தெரிவிக்கின்றனர்.

நர்மாபள்ளம் விவசாயிகளின் நிலையோ மிகப்பரிதாபம். ஒரு மூட்டை விதை நெல் ரூ.1500-க்கு வாங்கி, ஆள் பற்றாக்குறை காரணமாக முழுக்க முழுக்க திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்று நட்டுள்ளனர். மேலும், ஒரு ஏக்கருக்கு விதை முதல் அறுவடை வரை நகை அடகு மற்றும் பயிர்க் கடன் பெற்று சாகுபடி செய்த பயிர்கள் வீணாகிவிட்டதே என்று புலம்பித் தவிக்கின்றனர்.

அனக்காவூர் வட்டாரத்தில் நர்மாபள்ளம், குறும்பூர், மடிப்பாக்கம், வீரம்பாக்கம், தேத்துறை, மேல்நெமிலி, கிழாங்காம்பூண்டி, கோட்டகரம், முளகிரிப்பட்டு, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 600 ஏக்கர் நெல் பயிர்கள் கருகியதால் 350-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், செய்யாறு வட்டாரத்தில் மேல்கொளத்தூர், புதுக்கோட்டை, விண்ணமங்கலம், மாளிகைப்பட்டு, செங்கம்பூண்டி, திருமணி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் நெற்பயிர்கள் கருகியதால் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் வெம்பாக்கம் வட்டாரத்தில் சுமங்கலி, கரந்தை ஆகிய பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் நெல் பயிர்கள் கருகியதால் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர்.

விவசாயம் முற்றிலும் பாதித்து விட்டதால், பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகள், அரசு உரிய இழப்பீடு வழங்க ú4வண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



கிழங்காம்பூண்டி கிராமத்தில் முற்றிலும் கருகி விட்ட நெற்பயிரை உண்ணும் கால்நடைகள்.

Newsletter