பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

புதிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏழுமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: குறிஞ்சிப்பாடி வட்டத்தில் தற்போது விதைப்பு செய்துள்ள மணிலா, உளுந்து பயிர்களை காப்பீடு செய்து பயனடையலாம். புதிய காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு தொகையை 4 நிலைகளாகப் பெற வாய்ப்புள்ளது. விதைக்க இயலாத சூழ்நிலை மற்றும் இயற்கை சூழ்நிலையில் விதைகள் முளைத்து கருகியிருந்தால் காப்பீட்டுத் தொகையில் 25 சதவீதம் இழப்பீடு வழங்கப்படும். பயிர்களின் வளர்ச்சிப் பருவம் முதல் அறுவடை வரை இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு உத்தரவாத மகசூல் 50 சதவீதம் குறைவாக இருந்தால் 25 சதவீதம் இழப்பீடு வழங்கப்படும். அறுவடை செய்த 2 வாரங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படுமாயின் இழப்பீடு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் உளுந்து மற்றும் பச்சைப் பயறுக்கு காப்பீட்டு தொகை ரூ.12 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 15.2.2017 தேதிக்கு முன்னதாக காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதம் (ஏக்கருக்கு ரூ.180), நிலக்கடலை பயிருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் நிர்ணயம் செய்யப்பட்டது. 31.12.2016-க்கு முன்னதாக காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதம் (ஏக்கருக்கு ரூ.300) முனைமம் செலுத்தி பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு கிராம உதவி வேளாண்மை அலுவலரை தொடர்புகொண்டு சிட்டா, அடங்கல், வங்கிப் புத்தகம், ஆதார் கார்டு ஆவணங்களை வழங்கி உரிய காலக்கெடுவுக்குள் முனைமம் செலுத்தி பயனடையுமாறு விவசாயிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter