பருவநிலைக்கு ஏற்ப நெல், மணிலா பயிரிடலாம்: வேளாண் அதிகாரி அறிவுரை

தற்போதைய பருவநிலைக்கு ஏற்ப விவசாயிகள் நெல், மணிலா ரகங்களை சாகுபடி செய்யலாம் என வேளாண் உதவி இயக்குநர் அறிவுறுத்தினார் விழுப்புரம் அருகே கோலியனூர் வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மணிலா விதை விநியோகம் அண்மையில் தொடங்கியது.

வேளாண்மை உதவி இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் தொடங்கி வைத்துப் பேசியது:

இந்தாண்டு பருவமழையின்றி அசாதாரண சீதோஷ்ண நிலை உள்ளது.

நிலவி வரும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மோட்டார் பாசனம், திறந்தவெளி கிணறுகளில் போதுமான நீர்வளம் இருக்கும் விவசாயிகள், குறைந்த கால வயதுடைய கோ-51 நெல் ரகத்தை பயிரிடலாம்.

இந்த ரகம், 105 முதல் 110 நாள்கள் வயதுடையது. சன்ன ரகம். ஏக்கருக்கு 2500 முதல் 3000 கிலோ வரை மகசூல் அளிக்கக்கூடியது.

வெள்ளை பொன்னிக்கு அடுத்த நிலையிள் விலை கிடைக்கும். ஆகையால், நீர்வளம் உள்ள விவசாயிகள் கோ-51 நெல் ரகத்தை, பிந்தைய சம்பா மற்றும் நவரை பருவத்துக்கு தேர்வு செய்யலாம்.

இந்தாண்டு நிலவி வரும் சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு கோ-51 ரக நெல் விதைகள் சுமார் 100 மெ.டன் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கிலோவுக்கு ரூ.10 மானியம் வழங்கப்படுகிறது. பாசன நீர்த் தேவையை குறைத்திட இயந்திர நெல் நடவு செய்திட வேண்டும். இயந்திர நடவு விவசாயிகளுக்கு டெக்டேருக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படுகிறது.

நீர்ப் பாசனம் குறைவாக உள்ள பகுதிகளில் உளுந்து, மணிலா, கம்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம்.

1 ஏக்கர் நெல் பயிருக்கு தேவைப்படும் நீரினைப் பயன்படுத்தி 4 முதல் 5 ஏக்கர் வரை உளுந்து, மணிலா, கம்பு, மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம்.
போதுமான உளுந்து, மணிலா விதைகள், கிலோவுக்கு ரூ.25 மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

வேளாண் அலுவலர்கள் செந்தில்குமார், கங்காகெüரி, உதவி அலுவலர்கள் சுரேஷ்குமார், ரவிச்சந்திரன், அமிர்தலிங்கம், சீனுவாசன், ஏழுமலை, பழனி மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter