நெற்பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் அதிகாரி ஆலோசனை

நெற்பயிரில் மாவுப் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண் உதவி இயக்குநர் சீ.இளவரசன் ஆலோசனை தெரிவித்துள்ளார். மேல்புவனகிரி வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் மாவுப் பூச்சிகள் தாக்குதல் காணப்படுகிறது. குறிப்பாக சித்தேரி, மேலமணக்குடி, சாத்தப்பாடி பகுதிகளில் புழுதியில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் மாவுப்பூச்சிகள் தாக்குதல் காணப்படுகிறது. இதுதொடர்பாக கரும்பு ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் துரைசாமி, முனைவர் திருவரசன், மேல்புவனகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சீ.இளவரசன் ஆகியோர் வயல்களில் ஆய்வு செய்தனர்.

பின்னர் தாகுத்தலை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து இளவரன் தெரிவித்துள்ளதாவது: பிரிவெண்ணியா ரெகி என்ற மாவுப்பூச்சி தாக்கப்பட்ட நெல் வயல்களில் பயிர் காய்ந்தும், வளர்ச்சி குன்றியும் காணப்படும். இலைகள் மஞ்சளாகவும், சுருண்டும் காணப்படும். சூரைநோய் தாக்கியது போல் திட்டு திட்டாக காணப்படும். தொடர் வறட்சி, புல் வகைக் களைகள் அதிகம் இருத்தல் போன்றவை இப்பூச்சியினம் தொடர்ந்து வாழ ஏதுவாக அமைகிறது.

இறக்கையற்ற பெண் பூச்சிகள் மற்றும் இளம் பூச்சிகள் நெற்பயிரின் தண்டுக்கும், இலை உறைக்கும் இடையில் அமர்ந்துகொண்டு சாற்றினை உறிஞ்சி பயிரின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் காற்றின் மூலம் இப்பூச்சி வேகமாகப் பரவுகிறது.

இப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த, வரப்புகளில் காணப்படும் புல்வகை களைகளை அகற்றி சீர்செய்ய வேண்டும். பூச்சி தாக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்தல் வேண்டும். தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் பியூப்ரோ பெஃசின் (25 நஇ)- 200மில்லி அல்லது தையோ மீத்தாக்சம் (25 ரஎ) என்ற பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

Newsletter