வறட்சியை சமாளிக்க கரும்பு பயிரிடலாம்

நீரின் இருப்பு குறைந்து வரும் காலத்தில் அனைத்து விவசாயிகளும் வறட்சியைத் தாங்கும் கரும்பு பயிரிடலாம்.

கரும்பு பயிரை தேர்ந்தெடுத்தால் அதற்கான நடவு வயலை தயாரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நடவு வயல் தயாரிப்பை பொறுத்தவரை அது களிமண் நிலமாக இருந்தால் நல்ல பொலபொலப்புத்தன்மை பெறும் வகையில் விவசாயிகளால் உழவு மேற்கொள்ள முடிவதில்லை. எனவே நெல் அறுவடைக்குப் பிறகு வயலின் குறுக்காகவும் வயலைச் சுற்றியும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் பாத்திகள் 6 மீட்டர் இடைவெளியில் 40 செ.மீ. ஆழம் மற்றும் 30 செ.மீ. அகலத்தில் அமைக்க வேண்டும். நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் மண்வெட்டி கொண்டு அமைக்க வேண்டும். நடவு சாலினை 4 முதல் 5 நாள்கள் வரையிலும் களைகொத்தி கொண்டு கிளறி விடுதல் வேண்டும்.

அதிகமாக தண்ணீர் தேங்கி நின்று மற்றும் அதனை வடித்து வெளியேற்ற முடியாத வயல்களில் 30 செ.மீ. இடைவெளியில் 5 மீட்டர் நீளம், 80 செ.மீ. அகலம் மற்றும் 15 செ.மீ. உயரம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்திட வேண்டும். இரு மண் மற்றும் மணல்சாரி தோட்டக்கலை நிலங்களில் ஆரம்பத்தில் இரண்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும். தொடர்ந்து எட்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும். தொடர்ந்து ஒரு முறை சுழல் கலப்பை கொண்டு மண்ணை பொலபொலப்பாக்கி பண்படுத்துவதன் மூலம் களை மற்றும் பயிர்தூர் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

சீரான முறையில் நீர்ப் பாசனம் செய்திட நிலத்தை நன்கு சமன்படுத்த வேண்டும். நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் விக்டரி அல்லது பார் அமைக்கும் கலப்பை கொண்டு அமைக்க வேண்டும். நடவு சால்கள் 20 செ.மீ. ஆழம் உடையதாக இருத்தல் வேண்டும். நீர்ப் பாசன வாய்க்கால்கள் 10 மீட்டர் இடைவெளியில் இருத்தல் வேண்டும்.

நடவு செய்த மூன்று நாள்களுக்குள் வரப்பின் எதிர் திசையில் 10 செ.மீ இடைவெளியில் ரைசோபிம் கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை
ஹெக்டேருக்கு 10 கிலோ அளவு விதைக்க வேண்டும்.

அதிக இடைவெளியுள்ள பயிர்களில் நடவு செய்த 50-60 நாள்களில் பசுந்தாளை உழுதுவிட வேண்டும். அதுபோல் நடவு செய்த 90-100 வது நாளில் பரிந்துரைக்கப்பட்ட தழைச் சத்துடன் மண் அணைக்க வேண்டும்.

கரணைகளை வரப்பின் ஒரு பக்கத்தில் நடவு செய்ய வேண்டும். வயலில் போக்கிடங்கள் இருந்தால் நடவு செய்த 30 நாள்களுக்குள் முளைத்த கரணைகளைக் கொண்டு நடவு செய்திட வேண்டும். இரண்டு பதியம் கரணைகளைக் கொண்டு சந்து நிரப்புதல் வேண்டும். 15-20 நாள்களான பாலிதீன் பை நாற்றுகளை நடவு செய்வதன் மூலம் பயிர் நன்றாக வளரும். போக்கிடங்களில் நடவு செய்த பிறகு மூன்று வாரங்கள் வரையிலும் வயலில் தேவையான ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது கரணைகள் நன்கு முளைத்து வளர ஏதுவாகும்.

தோகை பரப்புதல்: சால்மேடுகளில் காய்ந்த கரும்புத் தோகையை சீராக 10 செ.மீ. உயரத்துக்கு நடவு செய்த ஒரு வாரத்துக்குள் பரப்புதல் வேண்டும். இதனால் வறட்சி காலங்களில் கரும்பு தாக்குப்பிடித்து வளர்வதற்கும், கரும்பின் நீர் தேவை குறைவதற்கும், களைச் செடிகளின் ஆதிக்கம் குறைவதற்கும் மற்றும் இளங்குருத்துப் புழுவின் தாக்குதல் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. களிமண் வகைகளில் தோகை பரப்புதலை நடவு செய்த 21 நாள்களுக்குப் பிறகு செய்திட வேண்டும். கரையான் தொல்லை அதிகம் உள்ள இடங்களில் தோகை பரப்புதலை செய்யாமல் இருத்தல் நன்று.

ஊடுபயிர் சாகுபடி: தண்ணீர் தட்டுப்பாடு அற்ற பகுதிகளில் சோயா மொச்சை அல்லது உளுந்து அல்லது பச்சைப்பயறு போன்ற பயிர்களை கரும்பு நடவுசால் மேடுகளின் நடுவில் ஒரு வரிசையில் விதைக்கலாம். கொளுஞ்சி அல்லது சணப்பை ஊடுபயிராக நடவுசால் மேடுகளில் விதைத்த 45-ஆம் நாள் பிடுங்கி கரும்பு வரிசைக்கு அருகே வைத்து மண் அணைப்பதன் மூலமாக மண்ணின் சத்துகள் அதிகரிப்பதோடு கரும்பில் அதிக மகசூல் அடையலாம். மேலும் கோ1 என்ற சோயா மொச்சை ஊடுபயிர் செய்வதன் மூலம் கரும்பின் மகசூல் குறையாமல், சோயா மொச்சையிலிருந்து ஒரு ஹெக்டேருக்கு 800 கிலோ வரையில் மகசூல் எடுக்கலாம்.

மண் அணைத்தல்: மூன்றாவது தவணையாக ரசாயன உரம் இட்ட 90-வது நாள்களுக்குப் பிறகு விக்டரி கலப்பை கொண்டு சால்மேடுகளை இருபுறமும் உடைத்து விடுவதன் மூலம் சீரிய முறையிலும் சிக்கனமாகவும் மண் அணைக்கலாம். கரும்பு நடவு செய்த 150-வது நாள் மண் வெட்டி அல்லது விக்டரி கலப்பை கொண்டு மண் அணைக்கலாம்.

தோகை உரித்தல்: துளைப்பான் தாக்குதலை தவிர்க்க 150 மற்றும் 210-வது நாளில் உலர் கரும்பு இலைகளை நீக்க வேண்டும். கரும்பில் நடவு செய்த 210-ம் நாள் கரும்பின் இரண்டு வரிசையில் உள்ள கரும்புகளை குறுக்காக ஒன்று சேர்த்து விட்டம் கட்ட வேண்டும்.

கரும்புப் பயிர் வரிசைக்கு பக்கவாட்டில் களைக் கொத்தி கொண்டு சுமார் 5 செ.மீ. ஆழசால் அமைத்து அதில் உரங்களை தொடராக இட்டு பின்னர் மண் கொண்டு மூட வேண்டும். 255 கிலோ தழைச்சத்தினை யூரியா மற்றும் பொட்டாஷ் சேர்த்து 15 செ.மீ. ஆழத்தில் கரும்புப் பயிரின் ஒவ்வொரு குத்துக்கு அருகே இடுவதன் மூலம் 20 கிலோ தழைச் சத்தினை கரும்பின் மகசூல் பாதிக்காத வகையில் சேமிக்கலாம்.

சொட்டு நீர்ப்பாசனம்: 6 முதல் 7 மாத கரும்பு நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்யப்பட்ட விதைக் கரணைகளை 30 30 30 150 செ.மீ. என்ற இடைவெளியில் இரு வரிசை பாரில் நடவு செய்யவும். ஒரு வரிசையில் மீட்டர் ஒன்றுக்கு எட்டு கரணைகளை வரப்பின் இரண்டு பக்கத்திலும் நடுவதன் மூலம் வாய்க்கால் நடவு முறையை அமைக்கலாம். 12 மிமீ அகல சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு குழாய்களை நடவு சால்மேட்டின் மத்தியில் இரு பக்கவாட்டு குழாய்களுக்கான இடைவெளி 240 செ.மீ. இருக்கும் விதத்தில் அமைக்க வேண்டும். இந்த பக்கவாட்டு குழாய்களிலிருந்து 75 செ.மீ. இடைவெளியில் ஒரு மணி நேரத்துக்கு 8 லிட்டர் பாசன சொட்டு நீர் வெளியாகும் விதமாக வடிவமைக்க வேண்டும்.

வறட்சி மேலாண்மை: நீர்ப் பற்றாக்குறையை சரிகட்ட எத்தரல் 200 பி.பி.எம். அல்லது சுண்ணாம்புக் கரைசல் (80 கிலோ சுண்ணாம்பை 400 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) போன்றவற்றில் விதைக்க கரணைகளை ஒரு மணி நேரம் நனைத்து வைத்திருந்த 30 செ.மீ. ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். பின்பு நீர்ப் பற்றாக்குறை காலங்களில் பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சதவீத கரைசல் ஒவ்வொன்றையும் 15 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) கரைசலை தெளிப்புச் செய்ய வேண்டும். நீர்ப் பற்றாக்குறையான சூழ்நிலைகளில் மாற்று சால் மற்றும் சால் விட்டு சால் பாசன முறைகளைக் கையாளுவது நன்மை பயப்பனவாக அமைகிறது.

அறுவடை: முன்பட்ட கரும்பு ரகங்களை 10 முதல் 11 மாதத்துக்குள்ளும் பின்பட்ட ரகங்களை 11 முதல் 12 மாதத்துக்குள்ளும் அறுவடை செய்ய வேண்டும். கரும்பினை அதன் உச்சகட்ட முதிர்ச்சி காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யும்போது நடவுப் பயிராக இருந்தாலும் அல்லது மறுதாம்புப் பயிராக இருந்தாலும் தரையோடு தரையாக பூமி மட்டத்துக்கு அறுவடை செய்ய வேண்டும்.

கரும்பு பயிர் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள வட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கரும்பு வளர்ச்சி அலுவலங்களில் இருக்கும் கரும்பு அபிவிருத்தி அலுவலர்களையும், உதவி கரும்பு அபிவிருத்தி அலுவலர்களையும் அணுகினால் அவர்கள் பயிரை பதிவு செய்வது, அரசின் மானியங்களை பெற்றுத் தருவது, அறுவடைக்கு உத்தரவு தருவது போன்ற பணிகளில் ஆலோசனைகளைத் தெரிவிப்பர்.

Newsletter