விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் பாசிப்பயறு, உளுந்து விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் கவலை

கோவில்பட்டி வருவாய் கோட்டத்தில் நிகழாண்டு பருவத்துக்கு ஏற்ற மழைப்பொழிவு இல்லாததால் பாசி, உளுந்து மானாவாரி பயிர்களில் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நிகழாண்டு, புரட்டாசி இரண்டாவது வாரத்தில் உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை வறண்ட நிலத்தில் விதைத்து மழையை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இத்தகைய சூழலில் ஐப்பசி மாதத்தில் கோவில்பட்டி கோட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் வட்டங்களில் சில பகுதிகளில் ஓரளவு நல்ல மழை பெய்தது. சில பகுதிகளில் மழையளவு சற்று குறைவாக இருந்தது. இருப்பினும் சில தினங்கள் பெய்த மழையால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியதோடு பயிர்களும் செழிப்பாக இருந்தன. ஆனால் அதன்பிறகு மழை இல்லாததால் பயிர்கள் பாதிப்படைந்தது.

புரட்டாசி இரண்டாவது வாரத்தில் பயிரிடப்பட்ட பாசிப்பயறு, உளுந்து உள்ளிட்ட பயறுகளின் முதிர்வு காலம் தற்போது எட்டியுள்ள நிலையில், போதிய மழையின்மை காரணமாக செடிகளில் காய் பிடிக்காமல் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெம்பூர், கரிசல்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பாசிப்பயறு அறுவடை தொடங்கி உள்ளது. இதில் பாசி, உளுந்து பயிர்களில் மகசூல் எதிர்பார்த்த அளவு இல்லாததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கரிசல்குளத்தைச் சேர்ந்த விவசாயி முத்துவேல் கூறியது: கடந்த 15 நாள்களாக மழையின்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பயிரில் காய் பிடிக்காமல் போய் விட்டது. காய் பிடித்த பயிர்களில் பூஞ்சாண் நோய் பாதிப்பு காரணமாக விளைச்சல் இல்லாமல் போனது. ஏக்கருக்கு 6 முதல் 8 குவிண்டால் வரை மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில் ஒரு குவிண்டால் பாசிப்பயறு மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. பாசி, உளுந்து வகைகளுக்கு சந்தையில் நல்ல விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே ஏக்கருக்கு  ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து மதிமுக விவசாய அணி மாநில துணைச் செயலர் வரதராஜன் கூறியது:   தொடக்கத்தில்  எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாததால் விளைச்சல் இல்லை. குறிப்பாக, கடந்த 15 நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் மழைபெய்யாமல் போக்கு காட்டியதால் பாசிப்பயறு போதிய விளைச்சல் இன்றி திரட்சியின்றி மகசூல் பாதியாக குறைந்துள்ளது. இனிமேல் மழை பெய்தாலும் போதிய விளைச்சல் கிடைப்பது சந்தேகமே. எனவே பயிர் சாகுபடி கணக்கெடுப்பு மற்றும் பயிர் விளைச்சல் பாதிப்பு கணக்குகளை முறையாக எடுத்து ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம்  நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் அவர்.

Newsletter