500,1000 ரூபாய் சிக்கல்: வாழை விவசாயிகள் தொடர் பாதிப்பு

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நிலையில், வியாழக்கிழமை குலசேகரம் சந்தையில் வாழைக்குலை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் கடும் அவதிப்பட்டனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் வாழை, அன்னாசி உள்ளிட்ட விவசாயிகள் தொடர் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். வாழைப்பழங்கள் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட பொருள்களான சிப்ஸ் உள்ளிட்டவற்றின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் உள்ளூரில் சந்தைகளில் வாழைத்தார்களின் விற்பனை படுமந்தமாகியுள்ளது. இதுபோன்று அன்னாசிப் பழங்களின் விற்பனையும் கடும் சரிவைக் கண்டுள்ளது.

ஏற்றுமதி பாதிப்பு: குமரி மாவட்டத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு வாழைக்காய்கள் ஏற்றுமதி யும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடன் கொடுக்கும் விவசாயிகள்: சந்தைகளில் வாழைத்தார்களை கொள்முதல் செய்ய வரும் பழக்கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் சில்லறை ரூபாய் நோட்டுகளை  வைத்திருக்காததால், விவசாயிகள் தாம் கொண்டுசெல்லும் வாழைத்தார்களை கடனுக்கு விற்பனை செய்யும் நிலை தொடர்கிறது. குலசேகரம் சந்தையில் வியாழக்கிழமை இந்த நிலையைக் காண முடிந்தது. மேலும், போட்டி போட்டு வாழைத்தார்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் தார்களின் விலையும் குறைவாகவே இருந்தது.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், வாழை, அன்னாசி உள்ளிட்ட விவசாயிகளின் பாடு திண்டாட்டமாக மாறியுள்ளது. பிற பயிர்களைப் போல வாழை, அன்னாசி ஆகியவற்றை முன்கூட்டியோ அல்லது தாமதமாகவோ அறுவடை செய்ய முடியாது. விளைச்சல் கண்டால் உடனே அறுவடை செய்திட வேண்டும். தற்போது நிலவும் பணத் தட்டுப்பாட்டால் வாழை, அன்னாசி விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது என்றார்.

பழங்குடி மக்கள் அவதி: குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, ஆறுகாணி உள்ளிட்ட மலைப் பகுதிகளை மையமாகக் கொண்டு வாழும் பழங்குடி மக்கள், தங்கள் உற்பத்திப் பொருள்களான மிளகு, கிராம்பு, பாக்கு, ரப்பர், முந்திரி உள்ளிட்ட பொருள்களை குலசேகரம், பனச்சமூடு உள்ளிட்ட சந்தைகளில் விற்பனை செய்வது வழக்கம். தற்போது ரூபாய் நோட்டு சிக்கல் அம்மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter