மஞ்சள் பாலிஷிங் இயந்திரம் வாங்க தமிழக விவசாயிகளுக்கு மானியம்: மாநிலங்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

மஞ்சள் பாலிஷிங் இயந்திரம் வாங்குவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த மஞ்சள் சாகுபடி விவசாயிகளுக்கு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில் வருமாறு: ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், மஞ்சள் பாலிஷிங் இயந்திரங்களை அமைப்பதற்காக மஞ்சள் சாகுபடி விவசாயிகளுக்கு இந்திய நறுமணப் பொருள்கள் வாரியம் மூலம் உதவி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்படி, தமிழகம் உள்பட மஞ்சள் சாகுபடி அதிகளவில் நடைபெறும் மாநிலங்களில் எஸ்சி, எஸ்டி விவசாயிகள், சிறு, விளிம்புநிலை, பெண் விவசாயிகள் ஆகியோருக்கு மஞ்சள் பாலிஷிங் இயந்திரத்தின் விலையில் 35 சதவீதம் (அதிகபட்சம் 87,500) மானியமாக அளிக்கப்படுகிறது.

பிற விவசாயிகளுக்கு இயந்திரத்தின் விலையில் மானியமாக ரூ.62,500 வழங்கப்படுகிறது.

2016-17 நிதியாண்டில் மஞ்சள் பாலிஷிங் இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்காக ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் (எம்ஐடிஎச்) மொத்தம் ரூ.10.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், தமிழகத்திற்கு ரூ.2.62 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்திய நறுமணப் பொருள்கள் வாரியம் மூலம் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி, ஏற்றுமதி மேம்பாடு மற்றும் நறுமணப்பொருள்கள் ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மஞ்சள் சாகுபடி விவசாயிகளுக்கு மஞ்சள் கொதிகலன்களை நிறுவுவதற்கு கொதிகலன் விலையில் 50 சதவீதம் அளவுக்கு அதாவது அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Newsletter