நீரின்றி கருகிய 300 ஏக்கர் சம்பா நெற்பயிர்: விவசாயிகள் கவலை

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் போதிய நீர்ப்பாசனம் இல்லாததால், சுமார் 300 ஏக்கர் சம்பா நெற்பயிர் கருகி வருகிறது. எனவே, பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கியத் தொழிலாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் விவசாயிகள் கரும்பு, நெல், வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனர்.

இந்த ஒன்றியத்தைச் சேர்ந்த மன்சுராபாத், சித்தாத்துரை, ஆத்துரை, பெலாசூர், மொடையூர், நரசிங்கபுரம், நம்பேடு உள்ளிட்ட 49 ஊராட்சிகளில் விவசாயிகள் தற்போது சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

இதில் சில விவசாயிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆடி 18-ல் சம்ப பயிர் வைக்க பொன்னி நெல் விதை விதைத்தனர். தொடர்ந்து, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விவசாயிகள் கிணற்று நீரை நம்பி நடவு செய்தனர்.

ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பருவமழை பொழிவதால், இதனடிப்படையில் நெல் நடவு செய்யும் விவசாயிகள், பயிரை விளைவித்து, அறுவடை செய்துவிடுவர். ஆனால், நடப்பாண்டில் பருவ மழை பொய்த்ததால், நெல் பயிரை விளைவிக்க முழுமையாக கிணற்று நீரை பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

எனினும், கிணறுகளில் போதிய அளவில் தண்ணீர் இல்லாததாலும், பருவ மழை பொய்த்ததாலும் இன்னும் 30 நாள்கள் தண்ணீர் பாய்ச்சினால் அறுவடைக்கு வந்து பலன் தரும் தருவாயில் தண்ணீர் இல்லாமல் சுமார் 300 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

முற்றிலும் கருகிய நெற்பயிர்களில் கால்நடைகளை கட்டி விவசாயிகள் மேய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். எனவே, வேளாண்மைத் துறை சார்பில் கருகிய நெற்பயிர்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter