ஊத்தங்கரை பகுதிகளில் மாங்காய் விளைச்சல் அமோகம்

ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துப்பட்டி அருகே நிகழாண்டு பருவமாற்று முறையில் விளைவிக்கப்பட்ட மாங்காய் விளைச்சல் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் பருவமுறை மாறிகாய்ப்பு திட்டம் குறித்து பல்வேறு பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது இந்தப் பகுதியில் உள்ள சுமார் 300 விவசாயிகளின் முயற்சியால் மாந்தோட்டத்தில் பெங்களூரா, நீலம், செந்தூரா, காதர், அல்போன்ஸா உள்ளிட்ட ரகங்கள் பருவம் மாறி காய்க்கும் முறையில் அதிக அளவில் காய்த்துள்ளன.

இதுகுறித்து பகுதி விவசாயிகள் கூறியதாவது: மே, ஜூன் மாதங்களில் காய்க்கும் மாங்காய்கள் பழச்சாறு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுவதால் கிலோவுக்கு ரூ. 4 முதல் 10 வரை கிடைக்கும். அதில் போதிய லாபம் கிடைப்பதில்லை. ஆனால், தற்போது இந்தப் பருவமாற்று முறையில் விளைவிக்கப்படும் மாங்காய்கள் கிலோ ரூ.40 முதல் 100 வரை விற்கப்படுவதால் அதிக லாபம் கிடைக்கிறது. மேலும் இங்கிருந்து மாங்காய்கள் அதிகளவில் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தமிழகத்திலேயே செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை சுமார் 2,500 டன் மாங்காய் விளைச்சல் கொண்ட பகுதி இங்குதான் உள்ளது என பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் த.நா.பாலமோகன் கூறினார்.

Newsletter