பருவமழை தொடங்கியும் உயராத நீர்மட்டம்: தாமதமாகும் பிசான பருவ சாகுபடி

வடகிழக்குப் பருவமழை தொடங்கியபோதிலும் அணைகளின் நீர்மட்டம் உயராத காரணத்தால், நிகழாண்டு தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடி தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை கடந்த அக். 30இல் தொடங்கியது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான மழை பெய்தபோதிலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்யவில்லை.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 7 மி.மீ., பாபநாசம் கீழ் அணைப் பகுதியில் 3 மி.மீ., சேர்வலாறு அணையில் 9 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 4.8 மி.மீ., ராமநதி அணையில் 2 மி.மீ., நம்பியாறு அணையில் 5 மி.மீ., திருநெல்வேலியில் 6 மி.மீ., பாளையங்கோட்டையில் 11.2 மி.மீ., மூலக்கரைப்பட்டியில் 21 மி.மீ., நான்குனேரியில் 12 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 7.4 மி.மீ., சேரன்மகாதேவியில் 3 மி.மீ., சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 270.72 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 27 கனஅடி, கடனாநதி அணைக்கு 22 கனஅடி, ராமநதி அணைக்கு 10 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 27 கனஅடி, குண்டாறு அணைக்கு 5 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 48 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 10 கனஅடி நீர்வரத்து இருந்தது.

நீர் இருப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம்-30.80 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 51.02 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம்-34.50 அடி, கடனாநதி அணை நீர்மட்டம்-39 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 32.50 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 1.32 அடி உயர்ந்து 36.75 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 23 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 54 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 2 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 9.45 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 5 அடியாக இருந்தது.

தாமதமாகும் சாகுபடி: நீர்வரத்து இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் பெரிய அளவில் உயரவில்லை. தாமிரவருணிப் பாசனத்தில் தென்மேற்குப் பருவத்தைவிட வடகிழக்குப் பருவத்தில் திருநெல்வேலி மாவட்ட அணைகள் முழுக் கொள்ளளவை எட்டுவதுண்டு.

பருவமழை தொடங்கிய 2 வாரத்தில் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் 100 அடியை எட்டும். நவம்பர் மாத இறுதியில் பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்புவதுண்டு.

மணிமுத்தாறு அணை டிசம்பரில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நிரம்பும். நிகழாண்டு மழை தொடர்ந்து பெய்யாததால் பிசான பருவ சாகுபடிப் பணிகளை தொடங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. வியாழக்கிழமை (நவ. 10) நிலவரப்படி சேர்வலாறு, அடவிநயினார் அணைகளில் மட்டுமே நீர்மட்டம் 50 அடியாக உள்ளது.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் 30 அடியாக இருப்பதால் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை எழுந்துள்ளது. இதனால் பிசான பருவம் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Newsletter