காய்ந்து வரும் நெற்பயிர்களில் கால்நடைகளை மேயவிடும் விவசாயிகள்

சீர்காழி வட்டத்தில் தண்ணீரின்றி காய்ந்துவரும் நெல் வயல்களில் விவசாயிகள் கால்நடைகளை மேயவிட்டு வருகின்றனர்.

சீர்காழி வட்டத்தில் கொள்ளிடம், புத்தூர், பழையபாளையம், மாதானம், வழுதலைக்குடி, வேட்டங்குடி, ஆச்சாள்புரம், கொண்டல், நாங்கூர், கீழசட்டநாதபுரம், காரைமேடு வள்ளுவக்குடி, ஆதமங்கலம், பெருமங்கலம், கதிராமங்கலம், வைத்தீஸ்வரன்கோயில், எடக்குடிவடபாதி, திருவாலி, திருநகரி, மங்கைமடம், திருவெண்காடு, தருமக்குளம், நெய்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 22 ஆயிரம் ஏக்கரில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.

காவேரி நீரைப் பயன்படுத்தி நெற்பயிர்களை தொடர்ந்து காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் சாகுபடியை மேற்கொண்டு வந்தனர். ஆனால், மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக கடைமடைப் பகுதியான சீர்காழி பகுதிக்கு வந்து சேரவில்லை.

மேலும், பருவ மழையும் போதிய அளவில் பெய்யாததால் நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. இதனால், தொடர்ந்து நெற்பயிர்களை காப்பாற்ற முடியாது என நம்பிக்கை இழந்த சில விவசாயிகள் தங்களது வயலில் நேரடி விதைப்பு செய்த நெற்பயிர்களை ஆடு, மாடுகளை விட்டு மேய்த்து வருகின்றனர்.

Newsletter