ஏமாற்றும் பருவமழை; கருகத்தொடங்கின பயிர்கள்: கவலையில் புதுகை விவசாயிகள்

பருவமழைகள் புதுக்கோட்டை மாவட்டத்தை தொடர்ந்து ஏமாற்றி வரும் நிலையில், தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழையும் ஏமாற்றத்தையே தருவதால், அதை நம்பி விதைக்கப்பட்டுள்ள பயிர்கள் கருகத்தொடங்கியுள்ளதைக் கண்டு விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகத்திலுள்ள தென் மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. மாவட்டத்தின் மொத்த விவசாயப் பரப்பு சுமார் 1.40 லட்சம் ஹெக்டேர். இதில், 11,200 ஹெக்டேர் காவிரி பாசனப்பகுதி உள்பட 96,000 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 90% விவசாய நிலங்கள் நீர் ஆதாரத்துக்கு பருவமழையையும், நிலத்தடி நீரையும் மட்டுமே நம்பியுள்ளன.

மாவட்டத்தில் புதுக்கோட்டை கவிநாடு கண்மாய், ஆலங்குடி வல்லநாடு கண்மாய் என  2 பெரிய கண்மாய்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 6000 கண்மாய்களும், வெள்ளாறு, குண்டாறு, பாம்பாறு, அம்புலியாறு, கோரையாறு, சூறையாறு உள்ளிட்ட காட்டாறுகளும் விவசாயத்துக்கு அடிப்படையாக உள்ளன.

தொண்டைமான் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் காவிரியின் உபரிநீரை கொண்டுவர திட்டமிட்டும், அது நிறைவேறாமல் போனது. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் இன்று வரை போராடியும் தீர்வு பிறக்கவில்லை.

இச்சூழலில், பருவமழையும் எதிர்பார்த்த அளவில் பெய்யாததால், விவசாயிகள் தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 919.4 மி.மீ. என்ற நிலையில், நிகழாண்டில் இதுவரை 325 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள 5,094 குளங்களில் போதிய அளவு நீர் தேங்கவில்லை.

கடந்த ஆண்டில் 93 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இது மொத்த விவசாயப் பரப்பில் சுமார் 60 சதவீதமாகும். நிகழாண்டில், தென்மேற்குப் பருவமழை ஏமாற்றிவிட்டது. வடகிழக்குப் பருவமழையை நம்பி, நேரடி நடவு மூலம் 62,500 ஏக்கரில் (25,000 ஹெக்டேர்) நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2 வாரங்களாக வலுவான மழையின்றி, தூரல் மட்டுமே இருந்ததால், நீர்நிலைகளுக்கு போதிய அளவு தண்ணீர் வரவில்லை.

வானிலை விவசாயத்துக்கு சாதகமில்லாமல் போனதால், சாகுபடி செய்த பயிர்கள் கருகத்தொடங்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் ஜி.எஸ். தனபதி கூறியது:

கடந்த 5 ஆண்டுகளாகவே புதுக்கோட்டை மாவட்டம் வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. வழக்கமாக கிடைக்க வேண்டிய 420 மி.மீ. தென்மேற்குப் பருவமழை 220 மி.மீ. மட்டுமே கிடைத்துள்ளது. இது விவசாயத்துக்கு உதவவில்லை. தாமதமாகத் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை 495 மி.மீ. கிடைக்க வேண்டும். ஆனால், இதுவரை 100 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. நவம்பருக்குப் பிறகு பெய்யும் மழை அறுவடைக்கு உதவாது. விவசாயம் பொய்த்துப் போனதால், புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்து, ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் மு. மாதவன் கூறுகையில், தென்மேற்குப் பருவமழை முழு அளவில் இம்மாவட்டத்தில் இல்லை. இதே நிலை வடகிழக்குப் பருவமழையிலும் நீடித்தால், கடந்த ஆண்டைப் போல வறட்சியின் பிடியில் சிக்கும் நிலை ஏற்படும். ஆவுடையார்கோவில், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் நேரடி விதைப்பில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்களைக் காப்பாற்ற ஓரிரு நாட்களில் நல்ல மழை பெய்ய வேண்டும். இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்த தீர்வு என்பது, சுமார் ரூ. 5 ஆயிரம் கோடியில் அறிவிக்கப்பட்டுள்ள காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு துரிதமாக நிறைவேற்றும்போதுதான் ஏற்படும் என்றார்.

Newsletter