2 ஆண்டுகளாக ஊக்கத்தொகை பெறாத நெல் விவசாயிகள்! சாகுபடி பாதிக்கும் அபாயம்

புதுச்சேரி மாநிலத்தில் நெல் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாததால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் நெல் சாகுபடியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மிகச்சிறிய மாநிலமாக புதுச்சேரி விளங்குவதால், வேளாண் விளைப் பொருள்களுக்கு பிற மாநிலங்களைச் சார்ந்தே உள்ளது. ஒரு காலத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி நடந்த காலம் மாறி, தற்போது 15 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கே விவசாயம் நடைபெறுகிறது. குறிப்பாக ஏராளமான விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விட்டன.

எனவே, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் சாகுபடிக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் வேளாண்மை துறையால் செயல்படுத்தப்படுகிறது. மேலும், ஆத்மா திட்டத்தின் கீழ் உழவர் உதவியகம் மூலம் பல்வேறு இடுபொருள்கள், தொழில்நுட்ப உதவிகள் தரப்படுகின்றன.

மக்கள் தொகையில் அதிகம் பேர் அரிசி உணவை விரும்பி உண்பதால் நெல் சாகுபடிக்கு ஊக்கம் தரப்படுகிறது. நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு நெல்லுக்கான ஊக்கத்தொகையாக ஒரு போகத்துக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 4000 வழங்கப்பட்டது. இந்த நிலையில் அத்தொகையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரியதால் அது ரூ. 5000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும் 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு நெல் ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து பங்காரு வாய்க்கால் நீராதாரக் கூட்டமைப்புத் தலைவர் பாகூர் சந்திரசேகர் கூறியதாவது:

விவசாயிகளுக்கு நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு கடந்த கால ஆட்சியில் ரூ.4000-ம் வழங்கப்பட்டது. அது பின்னர் ரூ.5000-மாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 2014-15 சம்பா, சொர்ணாவரி மற்றும் 2015-16 சம்பா, சொர்ணாவரி ஆகிய 4 போகங்களுக்கான ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. இதற்காக வேளாண் துறையில் விவசாயிகள் விண்ணப்பித்து காத்துக் கிடக்கின்றனர். ஊக்கத்தொகையை வழங்கினால் தான் அடுத்த போகத்துக்கு எங்களால் சாகுபடி செய்ய முடியும். அதனை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

கூட்டுறவு வங்கியில் 25 சதவீத விவசாயிகளே கடன் வாங்குகின்றனர். 75 சதவீத விவசாயிகள் தேசிய வங்கிகளில் கடன் பெறுகின்றனர். எனவே, தேசிய வங்கிகளில் வாங்கிய கடன் தொகையை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். என்றார்.

"நிதி பற்றாக்குறையால் நிலுவை'. இதுகுறித்து வேளாண் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2014ஆம் ஆண்டுக்கான சம்பா சாகுபடி, 2015ஆம் ஆண்டுக்கான சொர்ணாவரி சாகுபடி உள்ளிட்ட 2 போகத்துக்கான ஊக்கத்தொகை நிலுவையில் உள்ளது. இதற்கான தொகை கடந்த ஆண்டு பெய்த மழையின் போது ஏற்பட்ட இழப்பீடாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

ஆகவே, நெல் ஊக்கத்தொகை வழங்க நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இதுதொடர்பாக கோப்புகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை தரப்படும் எனத் தெரிவித்தனர்.

Newsletter