நோய் தாக்குதலை கண்டறிய விதை பரிசோதனை அவசியம்

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பயிர் விதைகள் நோய் தாக்குதலுக்குள்ளானவையா என்பதை கண்டறிய அவற்றை பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் ஹேமேந்திரகுமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விதை வேளாண்மையில் உள்ள பயிர் விளைச்சல் பெற தரமான விதைகளை உபயோகப்படுத்த வேண்டும். தரமான விதை என்பது நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குறையாத முளைப்புத் திறன், புறத்தூய்மை, இனத்தூய்மை, நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மிகாத ஈரப்பதம் இருக்க வேண்டும்.

மேலும், பிற ரக விதைகள் இல்லாதது, பூச்சிநோய் தாக்குதல் இல்லாமல் இருப்பது முக்கியம். எனவே, விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் விதைகள் தரமானவையா என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

இதையொட்டி, விவசாயிகள் தங்களது விதை மாதிரிகளை உரிய அளவில் எடுத்து, உலர்ந்த துணிப்பையில் போட்டு, அதனுடன் விதை அனுப்புபவரின் பெயர், முகவரியைத் தெளிவாக எழுதி வைத்து, நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் சேர்க்க வேண்டும். விதை பரிசோதனைக்கு கட்டணமாக ரூ. 30 வசூலிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter