மானியத் திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறலாம்: வேளாண் துறை

பொன்னமராவதி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களில் மானியத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாக வேளாண் உதவி இயக்குநர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: 2016-17-ம் நிதியாண்டில் தமிழக அரசு வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மூலமும், மத்திய அரசின் திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தில் கைத்தெளிப்பான் வாங்கும் விவசாயிகளுக்கு ரூ. 600, ரொட்டோவேட்டர் வாங்குவோருக்கு ரூ. 35,000 மானியத் தொகையாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தில் நிலக்கடலையில் உளுந்து ஊடுபயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 7500 மானியம் வழங்கப்படுகிறது. மேலும் பைப்லைன் வாங்கும் விவசாயிகளுக்கு ரூ. 15000 வீதம் மானியம் வழங்கப்படுகிறது.

தேசிய எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய்பனை இயக்கத்தின் மூலம் எண்ணெய் தரும் மரங்களான வேப்பங்கன்றுகள் நடவு செய்யும் 3 விவசாயிகளுக்கு ரூ. 17000 வீதமும், புங்கன் கன்றுகள் நடவு செய்யும் 3 விவசாயிகளுக்கு ரூ. 2000 வீதமும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

தவிர தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 5000 வீதமும், நிலக்கடலை பயிரை விதைப்பு கருவி மூலம் வரிசையில் விதைப்பவர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 1000 வீதமும், நிலக்கடலைக்கு ஜிப்சம் வாங்கி வயலில் இடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 750 வீதமும், பசுந்தாளுரப்பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 1500 வீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட அனைத்து திட்டங்களிலும் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கான கணினி சிட்டா நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்தார்.

Newsletter