சம்பா நெல்சாகுபடிக்கான விதைகள், உரங்கள் தயார்: வேளாண் இணை இயக்குநர் தகவல்

மாவட்டத்தில் நிகழ் சம்பா பருவத்துக்கான விதைகள், உரங்கள் தயார் நிலையில் உள்ளதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள வேளாண் இணை இயக்குநர் தெரிவித்தார்.

மாவட்ட வேளாண் இணை இயக்குநராக இருந்த ரத்தினசபாபதி கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார்.

இதனையடுத்து, துணை இயக்குநர் ராமலிங்கம் தாற்காலிகமாகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் மாவட்ட வேளாண் இணை இயக்குநராக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தி.கார்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றார்.

வேளாண் துணை இயக்குநர்கள் செல்வராஜ், செல்வசேகர், உதவி இயக்குநர் கென்னடி மற்றும் வேளாண் அலுவலர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனையடுத்து, இணை இயக்குநர் தி.கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயறு வகைகள், 32 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

தற்போதைய சம்பா நெல் சாகுபடிக்கு, குறுகிய கால ரகமான கோ 51 விதைகள் 600 டன் அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மானிய விலையில் விதைகளைப் பெற்று பயன் பெறலாம்.

இதேபோல் உரங்களில், யூரியா 20 ஆயிரத்து 815 மெட்ரிக் டன்னும், டிஏபி 4,396 மெ.டன்னும், பொட்டாஷ் 3,693 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 7,604 மெ.டன்னும் தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதால், அரசின் நிர்ணய விலையில் அதனை விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்தலாம்.

இந்தாண்டு ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் உற்பத்தியை எட்டுவதற்கான இலக்கை அடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநில அளவில், விழுப்புரம் மாவட்டம் உணவு உற்பத்தியில் 10 முதல் 12 சதவீதமாக உள்ளது. இதனை 15 சதவீதமாக உயர்த்தவும், மாநில அளவில் முதலிடம் பெறவும் விவசாயப் பணிகள் ஊக்கப்படுத்தப்படும் என்றார்.

Newsletter