சம்பா சாகுபடியைக் காப்பாற்ற தமிழக அரசு நீர் மேலாண்மையை மேற்கொள்ள தஞ்சை வேளாண் வல்லுநர் குழு வலியுறுத்தல்

சம்பா சாகுபடியைக் காப்பாற்றுவதற்கு சிறந்த நீர் மேலாண்மையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தஞ்சாவூர் வேளாண் வல்லுநர் குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசுக்கு அக்குழுவினர் அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில் தெரிவித்திருப்பது:
மேட்டூர் அணை நீரைக் கொண்டு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. நிகழாண்டில் செப். 20-ம் தேதி சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
நிகழாண்டு இம்மாவட்டங்களில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மழை பெய்யவில்லை. ஆனால், கோடைகாலத்தில் (மார்ச் - மே) சேலம், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைத் தவிர இயல்பான அளவுக்கு அதிகமாகவே மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் இயல்பான மழையளவில் 75 முதல் 80% மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை அக். 30-ம் தேதி தொடங்கியது.

நிகழாண்டு மொத்த மழையளவில் அக். 31-ம் தேதி வரை 42% மட்டுமே மழை பெய்துள்ளது. இன்னும் மீதி 58% மழை பெய்ய வேண்டும். அதாவது 550 முதல் 600 மி.மீ. மழை பெய்யவேண்டும். இந்த மழையளவு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

காவிரி படுகையில் மேட்டூர் அணை நீர் கிடைக்காததாலும், தென்மேற்குப் பருவமழையில் குறைவு ஏற்பட்டதாலும், சம்பா நெல் சாகுபடி தாமதமாக தொடங்கியுள்ளது. இப்பரப்பு முழுவதும் அறுவடை பிப். 15-ம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாதத்தில் முடிவடைவதாலும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நெல் பயிர் பூக்கும் நிலை, பால் பிடிக்கும் நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும், இந்தக் காலத்தில் மேட்டூர் அணை நீரை மட்டுமே எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் பயிர் வளர்ச்சி நிலையில் இருப்பதாலும், நீர் தொடர்ந்து கட்ட வேண்டியதில்லை என்பதாலும், தொடர்ந்து போதுமான அளவு மழை கிடைக்கும் என்பதாலும், மேட்டூர் அணையைத் திறக்காமல் கிடைக்கும் மழை நீரையும், கர்நாடகம் அளிக்க வேண்டிய நீரையும் பாதுகாப்பாகத் தேக்கி வைத்து அவசியம் ஏற்படும் நேரத்தில், அதாவது ஜன. 10-ம் தேதி முதல் பிப். 15-ம் தேதி வரை இந்நீரை பயன்படுத்துவதே சிறந்த நீர் நிர்வாகமாக இருக்க முடியும். மகசூல் பெரும் சேதத்திலிருந்து காப்பாற்றவும் முடியும்.

மேலும், சாகுபடியை இதுவரை தொடங்காதவர்கள் இனிமேலும் நாற்று விடுவதையோ நேரடி நெல் விதைப்பு செய்வதையோ தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த விவசாயிகள் வடகிழக்குப் பருவமழையைக் கொண்டு வயலை உழுது சமப்படுத்தி வைத்திருந்தால், தை பட்டத்தில், அதாவது ஜன. 10-ம் தேதிக்குப் பிறகு வயல் மெழுகு பதத்துக்குக் கொண்டு வந்து பயறு வகை பயிர்களை விதைத்து சம்பா பயிரில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யலாம்.

Newsletter