பருவமழை தாமதத்தால் தரிசான நிலங்கள்: நிலக்கோட்டை பகுதியில் இருபோக சாகுபடி நடைபெறுமா?

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் பருவமழை தாமதத்தால் இருபோக சாகுபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிலக்கோட்டை வட்டாரத்தில் அணைப்பட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5000 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

வருடந்தோறும் முதல் போக சாகுபடி புரட்டாசி மாதம் தொடங்கி கார்த்திகை மாதம் வரையிலும், இரண்டாம் போகம் மார்கழியில் தொடங்கி மாசி மாதம் வரையிலும், மூன்றாம் போகம் வைகாசியில் தொடங்கி ஆடி மாதம் வரையிலும் நடைபெறும்.

போதிய மழை இல்லாத நிலையில் கடந்த சில வருடங்களாக இரண்டு போகம் மட்டும் இப்பகுதியில் விளைவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் பருவமழை தாமதம் காரணமாக இருபோக சாகுபடியிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி, அணைப்பட்டி விவசாயி சீனிவாசன் கூறியது: புரட்டாசி மாதமே முதல் போக நெல் நடவுப் பணிகளைச் செய்திருக்கவேண்டும். ஆனால் வடகிழக்குப் பருவமழை தாமதத்தால் நெல் நடவு பணி தாமதம் ஆகிறது.

இப்படியே போனால் இப்பகுதியில் ஒரு போகம் மட்டுமே விளையும் நிலை ஏற்படும். வைகை ஆற்றுப் பாசனத்தை நம்பி இந்த பகுதியில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். ஒரு சில இடத்தில் கிணற்றில் தண்ணீர் உள்ளதால் விவசாயப் பணி செய்கின்றனர். பருவமழையை பெரிதும் நம்பியுள்ளோம் என்றார்.  இதுபற்றி, நிலக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் கா.முருகன் கூறும்போது, வடகிழக்குப் பருவமழை தாமதாக ஆரம்பமாகியுள்ள நிலையில் விவசாயிகள் இத்தருணத்தை பயன்படுத்தி நெல் நடவுப் பணியை தொடங்கலாம். அரசு வேளாண் அலுவலகத்தின் மூலம், இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு 2.5 ஏக்கருக்கு ரூ.5000 பின்னேற்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

நெல் சாகுபடிக்கு தேவையான உயிர் உரங்கள், நெல் நுண்ணோட்ட உரங்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.

மேலும், பிரதமரின் பயிர்க் காப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி பாதிப்பு, வெள்ளத்தால் அறுவடை நிலை பாதிப்பு போன்ற சூழ்நிலைகளில் ஏற்படும் பயிர் சேதத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்றார்.

Newsletter