நோய் தாக்குதலால் பெரியகுளம் பகுதியில் வெற்றிலை விவசாயம் பாதிப்பு

பெரியகுளம் பகுதியில் வெற்றிலையில் நோய் தாக்குதலால் விவசாயம் பாதிப்படைந்துள்ளதாக, விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பெரியகுளம், கீழவடகரை, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, தேவதானபட்டி மற்றும் தாமரைக்குளம் பகுதிகளில் 500 ஹெக்டேர் பரப்பளவுக்கும் மேலாக வெற்றிலை விவசாயம் நடைபெறுகிறது.

இப்பகுதியில் நாட்டு வெற்றிலை மற்றும் சிறுகமணி வகை வெற்றிலை பயிரிடப்படுகிறது. 100 நாற்றுகள் கொண்ட சிறுகமணி வெற்றிலை கொடி ரூ. 250 க்கும், நாட்டு வெற்றிலைக் கொடி ரூ. 500-க்கும் வாங்கி நடவு செய்கின்றனர். ஒரு கன்னி தயார் செய்து நடவு செய்யும் வரை ரூ. 7000 ஆயிரம் வரை செலவாகிறது. அதன்பின்னர், 2 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச ஒரு கன்னிக்கு ரூ. 15 எனவும், ஒரு மணி நேரத்துக்கு ரூ. 20 என தண்ணீரை விலைக்கு வாங்கியும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

நடவு செய்யப்பட்டு 8-12 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கப்படுகிறது. இதில், நாட்டு வெற்றிலை விலை கிலோ ரூ. 130-140 என்றும், சிருகமணி வெற்றிலை கிலோ ரூ. 80-90 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கடந்தாண்டு கிலோ ரூ. 200 வரை விற்பனையானது. தற்போது, நோய் தாக்குதலால் போதிய விளைச்சல் இல்லை. இதனால் போதிய லாபமும் கிடைக்கவில்லை என, விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும், வெற்றிலைக் கொடி மகசூல் எடுக்கும் காலங்களில் போண்டா நோய் தாக்குவதால், வெற்றிலை போண்டா வடிவில் சுருங்கி விடுகிறது. அதேபோல், கருகல் நோய் தாக்குதலால் கொடி கருகி மடிந்துவிடும்.

இதனைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததுடன், ஆலோசனையும் வழங்குவதில்லை.
 
மருந்துக் கடை உரிமையாளர்கள் வழங்கும் மருந்துகளை வாங்கி அடித்தாலும் நோயைக் கட்டுப்படுத்த முடிவதில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Newsletter