தமிழ்நாட்டு கொத்தமல்லிக்கு நல்ல விலை- வேளாண் பல்கலை. தகவல்

வர்த்தக மூலங்களின்படி ராஜஸ்தானில் அதிக மழை காரணமாக கொத்தமல்லியின் வரத்து வரும் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருந்து உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப்படும் கொத்தமல்லி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கொத்தமல்லியில் தரம், மணம் உயர்வாக இருப்பதால் தமிழ்நாட்டின் கொத்தமல்லிக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இச்சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 15 ஆண்டுகளாக விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவி வரும் கொத்தமல்லி விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தற்போது நடவு செய்யும் கொத்தமல்லிக்கு அறுவடையின் போது குவிண்டாலுக்கு ரூ.8,500 கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்தான மேலும் தகவலுக்கு கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் அல்லது வாசனை மற்றும் நறுமணப் பொருட்கள் துறை பேராசிரியர், தலைவரை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter