காளான் உற்பத்தி பற்றி வேளாண் பல்கலைக்கழகத்தில் விளக்கம் - ஆர்வமுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின்‌ திட்டம்‌ மூலம்‌ காளான்‌ விதை மற்றும்‌ காளான் உற்பத்தி பயிற்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற கொங்குநாடு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியைச்‌ சேர்ந்த 100 பட்டியலின வகுப்பைச்‌ சார்ந்த மாணவர்களை துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி பாராட்டினார்.


கோவை: மாணவர்கள்‌ படிக்கும்‌ பொழுது காளான்‌ உற்பத்தியை தொழிலாக மேற்கொண்டால்‌ தன்னம்பிக்கை உயர்வதோடு வருமானமும்‌ ஈட்ட முடியும்‌ என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி ஊக்கப்படுத்தினார்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பலகலைக்கழகத்தின்‌ பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின்‌ அனைத்திந்திய ஒருங்கிணைந்த காளான்‌ அபிவிருத்தி திட்டத்தின்‌ நிதி உதவியோடு காளான்‌ விதை மற்றும்‌ காளான்‌ உற்பத்தி பற்றிய ஒரு நாள்‌ பயிற்சி கோவையில்‌ உள்ள கொங்குநாடு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியைச்‌ சேர்ந்த 100 பட்டியலின வகுப்பைச்‌ சார்ந்த மாணவர்களுக்கு 25.08.2023 அன்று வழங்கப்பட்டது.

இப்பயிற்சியினை ஆர்வமுடன்‌ மேற்கொண்டதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி மாணவர்களை பாராட்டினார்.

காளான்‌ வளர்ப்பின்‌ மூலம்‌ செங்குத்து இடத்தையும்‌ பயனுள்ளதாக உபயோகித்து குறுகிய காலத்தில்‌ புரத சத்துள்ள உணவு உற்பத்தி செய்து வருமானத்தைப்‌ பெருக்க முடியும்‌ என்பதை எடுத்துரைத்தார்‌. மேலும்‌ கட்டுப்படுத்தப்பட்ட சூழலில்‌ காளான்‌ உற்பத்தியை ஒருங்கிணைந்த பண்ணையத்தில்‌ ஒரு அங்கமாக இணைப்பதன மூலம்‌ மற்ற பயிர்களை விட வருமானத்தை பெருக்க இயலும்‌ என்பதை சுட்டிக்‌காட்டினார்‌.

காளான்‌ வளர்ப்பில்‌ உயர்‌ தோட்டக்கலை தொழில்நுட்பம்‌ மூலம்‌ பண்ணை கழிவுகளை உணவாக மாற்ற இயலும்‌ மற்றும்‌ இதன்‌ மூலம்‌ புரத சத்துள்ள உணவு உற்பத்தி செய்வதோடு சுற்றுச்சூழல்‌ மாசுவையும்‌ தடுக்க முடியும்‌ என்பதையும்‌ விளக்கினார்‌. மாணவர்கள்‌ படிக்கும்‌ பொழுது காளான்‌ உற்பத்தியை தொழிலாக மேற்கொண்டால்‌ தன்னம்பிக்கை உயர்வதோடு வருமானமும்‌ ஈட்ட முடியும்‌ என்று ஊக்கப்படுத்தினார்‌.

பயிர்‌ பாதுகாப்பு மைய இயக்குநர்‌ முனைவர்‌. மூ.சாந்தி,‌ காளான்களில்‌ உள்ள புரதம்‌, வைட்டமின்‌ டி, நார்சத்து, அமினோ அமிலங்கள்‌ மற்றும்‌ செலினியம்‌ உள்ளதால்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்‌ என்பதை சிறப்புரையில்‌ கூறினார்‌. அவர்‌ மேலும்‌ இத்தொழில்‌ முனைவோர்களுக்கு இப்பல்கலைக்கழகம்‌ காளான்‌ உற்பத்தி சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கும்‌ என்று தெரிவித்தார்‌.

காளான்‌ தொழிலை சிறு திட்டமாக முதலில்‌ தொடங்கி பிறகு முழுவதுமாக தொழில்நுட்பம்‌ மற்றும்‌ நிதி ஸ்திரத்தன்மையை அறிந்ததற்கு பிறகு இத்திட்டத்தை விரிவாக்கம்‌ செய்தால்‌ நிலைத்தன்மையை அடையமுடியும்‌ என்பதை திறந்த வெளி பயிலகத்தின்‌ இயக்குநர்‌ முனைவர்‌.ப.பாலசுப்ரமணியம்‌ எடுத்துரைத்தார்‌.

பயிர்‌ நோயியல்‌ துறையின்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌.கா.கார்த்திகேயன்‌, அனைத்திந்திய ஒருங்கிணைந்த காளான்‌ அபிவிருத்தி திட்டத்தில்‌ காளான்‌ பற்றிய ஆராயச்சிகள்‌ மட்டுமல்லாமல்‌ காளான்‌ சாகுபடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதால்‌ குழந்தைகளில்‌ காணப்படும்‌ ஊட்டச்சத்து குறைபாடு மற்றும்‌ வேலையில்லா திணாடாட்டத்தையும்‌ போக்க இயலும்‌ என்று கூறினார்‌.

இது சம்பந்தமாக பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ காளான்‌ பயிற்சிகள்‌ மூலம்‌ தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கு பெரும்‌ முனைப்புகள்‌ மேற்கொள்ளப்படுகின்றன என்று எடுத்துரைத்ததார்‌. பேராசிரியர்‌ மற்றும்‌ திட்ட அதிகாரி முனைவர்‌.கு.திரிபுவனமாலா‌ விரிவான செயல்விளக்கங்களோடு காளான்‌ விதை மற்றும்‌ சிப்பிக்காளான்‌, வைக்கோல்‌ காளான்‌ சாகுபடி முறைகள்‌ மற்றும்‌ மதிப்பூட்டப்பட்ட திறன்‌ சார்ந்த பயிற்சியை மணவர்களுக்கு அளித்தார்‌. பயனாளிகள்‌ அனைவருக்கும்‌ காளான்‌ வளர்ப்பிற்கு தேவையான விலையில்லா இடுபொருட்கள்‌ வழங்கப்பட்டன.

Newsletter