கோவை விராலியூரில் நாளை சிறப்பு கால்நடை மருத்துவ, விழிப்புணர்வு முகாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் கிராமத்தில் நாளை சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் கிராமத்தில் நாளை சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நான்கு சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவினுடன் இணைந்து நாளை தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் விராலியூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை, தடுப்பூசிகள், குடற்பழு நீக்க மருந்துகள், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை. ஆண்மை நீக்கம், அண்டு வாத அறுவை சிகிச்சைகள், புற ஒட்டுண்ணிகள் நீக்கம், கோழிகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் மூலம் கால்நடைகளின் சாணம், ரத்தம், சளி பால் மற்றும் சிறுநீர் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு நோய் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விளக்கப்படவுள்ளது.

மேலும் இம்முகாமில் கண்காட்சி அரங்கு மற்றும் விவசாயிகள் கருத்தரங்கு அமைக்கப்படவுள்ளதாகவும் சிறந்த கலப்பின கிடேரி கன்றுகளுக்கும் முன்னோடி கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

தீவன பயிர்கள் வளர்ப்பு, கால்நடைகளில் நோய் தடுப்பு முறைகள் தொழில்நுட்பம் சார்ந்த கால்நடை ஊர்ப்பு முறைகள் பாலின் பிரிப்பு முறையில் கருவூட்டல் தூய்மையான பால் உற்பத்தி அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு போன்ற தகவல்கள் அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter