உடுமலையில் தக்காளி கிலோ ரூ.100 வரை விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி!

உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில வாரங்களாக தக்காளிக்கு போதிய விலை கிடைக்காமல் இருந்த நிலையில் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.1,100 க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 14 கிலோ கொண்ட பெட்டி தக்காளி ரூ.1,100க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளிக்கு போதிய விலை கிடைக்காமல் இருந்த நிலையில் தற்பொழுது கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடுமலை சந்தைக்கு கொண்டு வரப்படும் தக்காளி 14 கிலோ கொண்ட பெட்டி ரூபாய் 50 முதல் 100 ரூபாய் வரைக்கும் விற்பனை ஆனதால் போக்குவரத்து செலவு கூட கட்டுபடியாகாமல் இருந்தது. 



இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து ஒரு பெட்டி ரூ.450 முதல் 600 வரை விற்பனையானது. கடும் இழப்பில் தவித்து வந்த விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் விலையாக இருந்தது ஆனால் .தற்போது இன்ப அதிர்ச்சியாக 14 கிலோ ஒரு பெட்டி தக்காளி ரூ.1100 வரை விற்பனை ஆகி உள்ளது. 

இந்த திடீர் விலை உயர்வுக்கு கர்நாடகாவில் இருந்து வியாபாரிகள் வரத் தொடங்கியது காரணம் என கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தொடர்ந்து தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் எல்லா சீசன்களின் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு வழிவகை செய்வது மூலம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter