கோவை வேளாண் பல்கலையில் தாவர திசு வளர்ப்பு பயிற்சி!

கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூன் 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தாவர உயிரி தொழில்நுட்பத்துறையில்‌ ‘தாவர திசு வளர்ப்பு’ நுட்பங்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில், 30 பேர் கலந்து கொண்டனர்.



கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்‌மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தாவர திசு வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. 

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிரி தொழில்நுட்ப மையத்தில்‌ இயங்கி வரும்‌ தாவர உயிரி தொழில்நுட்பத்‌ துறையில்‌ “தாவர திசு வளர்ப்பு” நுட்பங்களுக்கான பயிற்சி வகுப்பு 2023 வருடம்‌ ஜூன்‌ மாதம்‌ 5 தேதி முதல்‌ 9 தேதி வரை நடைபெற்றது. 



இப்பயிற்சிக்கு முன்பதிவு செய்யுமாறு “தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வலை தளங்களில்‌ அறிவிப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 32 பங்கேற்பாளர்கள்‌ பயிற்சி திட்டத்திற்கு பதிவு செய்து இருந்தனர்‌. அதில்‌ 30 பங்கேற்பாளர்கள்‌ ஜூன்‌ 5 முதல்‌ 9 வரை நடைபெற்ற “தாவர திசு வளர்ப்பு” நுட்பங்களுக்கான பயிற்சி திட்டத்தில்‌ பங்கேற்றனர்‌. 



இப்பயிற்சி திட்டத்தில்‌ நாள்‌ ஒன்றுக்கு 20% நேரம்‌ விரைவு விரிவுரைகள்‌ வழங்கவும்‌ 80% நேரம்‌ செய்முறை பயிற்சி வகுப்புகள்‌ நடத்தவும்‌ திட்டமிடப்பட்டிருந்தது.



முதல்‌ நாள்‌ ஜூன்‌ 5, 2023 அன்று “தாவர திசு வளர்ப்பு” பயிற்சி திட்டத்தை தாவர இனப்பெருக்கம்‌ மற்றும்‌ மரபியல்‌ மையத்தின்‌ இயக்குநராகிய டாக்டர்‌.ஆர்‌.ரவிகேசவன்‌ துவக்கி வைத்து தொடக்க உரையாற்றினார்‌. 



“தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிரித்‌ தொழில்நுட்பத்‌ துறையின்‌ ” இயக்குனர்‌ மற்றும்‌ “முதுகலை ஆய்வுகள்‌ பள்ளியின்‌ ” முதல்வருமாகிய டாக்டர்‌.ந.செந்தில்‌ தாவர உயிரி தொழில்நுட்பத்‌ துறையின்‌ மூத்த பேராசிரியர்‌ டாக்டர்‌.து.சுதாகர்‌ கலந்துகொண்டு‌ பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தனர்‌.

தொடர்ந்து,தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிர்‌ தாவரவியல்‌ துறையின்‌ தலைவர்‌. பேராசிரியர்‌ டாக்டர்‌ இரா. ஞானம்‌‌ “தாவர திசு வளர்ப்பு” என்ற தலைப்பில்‌ விரிவுரை வழங்கினார்‌. ICAR-SBI யின்‌ முதன்மை விஞ்ஞானி டாக்டர்‌.ஆ.சுகன்யா மற்றும் IFGTB.யின்‌ விஞ்ஞானி டாக்டர்‌.ரேகா ஆர்‌. வாரியர்‌ ஆகிய இருவரும்‌, கரும்பு மற்றும்‌ டிம்பர்‌ மரங்களில்‌ திசு வளர்ப்பு பற்றிய விரிவுரைகளை வழங்கினர்‌.

செய்முறை வகுப்பில்‌ அடிப்படை‌ கணக்குகள்‌ பல்வேறு திசு வளர்ப்புக்கான மூலக்‌ கரைசல்கள்‌ தயார்‌ செய்வது மற்றும்‌ வளர்ப்பு ஊடகங்கள்‌ தயாரித்தல்‌, வாழைத்‌ தண்டில்‌ முளை வளர்ப்பு, ரோஜாவில்‌ கணு வளர்ப்பு, நித்திய கல்யாணியில்‌ காலஸ்‌ வளர்ப்பு, தென்னையில்‌ கருவளர்ப்பு மற்றும்‌ சில பருப்பு பயிர்களில்‌ கருவளர்ப்பு போன்ற பயிற்சிகள்‌ நடத்தப்‌பட்டது. 

மேலும்‌ பங்கேற்பாளர்கள்‌ அனைவரும்‌ செய்வதற்கான வாய்ப்புகள்‌ அளிக்கப்பட்டது. அதன்படி அனைத்து பங்கேற்பாளர்களும்‌ தானாக மூலக்கரைசல்கள்‌ மற்றும்‌ வளர்ப்பூடகம்‌ தயார்‌ செய்து திசு வளர்ப்பு பயிற்சி செய்தனர்‌.

இறுதியாக, ஜூன்‌ 9, 2023 அன்று நிறைவு விழா நடைபெற்றது. இதில்‌ வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்குநர் டாக்டர்‌.எஸ்‌.சோமசுந்தரம்‌ கலந்து கொண்டார்‌. பங்கேற்பாளர்கள்‌ தங்களின்‌ நேர்மையான நிறைவுரை‌ கருத்துக்களை வழங்கினர்‌. அதன்பின்‌ பயிற்சிக்கான பங்கேற்பு சான்றிதழ்கள்‌ வழங்கப்பட்டு, பயிற்சி இனிதே நிறைவு பெற்றது.



Newsletter