உடுமலையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.2 க்கு விற்பனை - விவசாயிகள் வேதனை!

உடுமலையில் தக்காளி விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒரு கிலோ தக்காளி 2 முதல் 5 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை பகுதிகளில், தக்காளி அறுவடை சீசன் துவங்கி வரத்து அதிகரித்துள்ளதால், விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.



இந்த தக்காளியானது, கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. தற்போது, 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை துவங்கியுள்ளது.



இதனால், சந்தைக்கு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தக்காளி பெட்டிகள் வரத்து காணப்படுகிறது. நடப்பு சீசனில், படிப்படியாக அதிகரித்து, 1.50 லட்சம் பெட்டிகள் வரை வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரத்து அதிகரித்து உள்ளதால், தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி, கடந்த மாதம், 300 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது, 40 முதல், 70 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில், தக்காளி சாகுபடிக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. கடும் வறட்சி, திடீர் மழை காரணமாக, நடப்பாண்டு மகசூல் பெருமளவு குறைந்துள்ளது. பறிப்பு கூலி, வண்டி வாடகை, கமிஷன் என, பெட்டிக்கு, 30 ரூபாய் வரை செலவாகிறது. ஒரு கிலோ, 2 முதல் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், நடப்பு சீசன் தக்காளி சாகுபடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.

Newsletter