உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவன‌ செயல்பாட்டை மேம்படுத்த கோவை வேளாண் பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தொழில் நுட்ப உதவி, சந்தை, நிதி‌ தொடர்பு, புவிசார்‌ குறியீடு பதிவு போன்றவற்றுக்காக தேர்வு செய்யப்பட்ட 14 உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்களுடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ துணை வேந்தர் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில், 14 உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ நடைபெற்றது.

வேளாண்மையில்‌ தமிழக உழவர்கள்‌ சந்தித்து வரும்‌ பல்வேறு சவால்களை எதிர்கொள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர்‌ பேராசிரியர்‌ கீதாலட்சுமி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்‌.

அந்த வகையில்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஒவ்வொரு மையமும்‌ ஒரு உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அவற்றிற்கான தொழில்நுட்ப உதவி, சந்தை மற்றும்‌ நிதித்‌ தொடர்பு, புவிசார்‌ குறியீடு பதிவு போன்ற பணிகளைச்‌ செய்து வருகிறது. இம்முயற்சியில்‌ இதுவரை 112 உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்களை பல்கலைக்கழக மையங்கள்‌ தேர்வு செய்துள்ளது.



இதன்‌ ஒரு பகுதியாக, 14 உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்களுடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்திடும்‌ நிகழ்ச்சி நேற்றைய தினம் (ஏப்ரல் 12) தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்றது.

இந்த நிகழ்வில், உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌ சந்திக்கும்‌ சவால்களையும்‌, எதிர்பார்ப்புகளையும்‌ அறிந்துகொள்ள துணை வேந்தர்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவன இயக்குநர்களுடன்‌ விரிவான கலந்துரையாடினார்.

அப்போது, உழவர்‌ உற்பத்தியாளர்‌ குழுக்களின்‌ பொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்த வியாபார குறியீடு மற்றும்‌ சந்தை படுத்துதலின்‌ முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்‌. மேலும் உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவன பொருட்களை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை‌ கழகம்‌ தொடங்கவுள்ள வியாபார இணையதளத்தில்‌ பங்கேற்க வேண்டும் என ஊக்குவித்தார்‌.

இயக்குநர்‌ மற்றும்‌ உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவன இணைப்பு‌ திட்டத்தின்‌ தனி அலுவலர்‌ முனைவர் சுரேஷ்குமார்‌ இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்‌.

வேளாண் விரிவாக்க‌ கல்வி இயக்குநர்‌ முனைவர்‌ பி.பி.முருகன்‌ மற்றும்‌ தேர்வு‌ கட்டுப்பாட்டாளர் முனைவர்‌ வி.பாலசுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்‌. இறுதியாக பேராசிரியர் முனைவர்‌ வேலவன்‌ நன்றியுரை வழங்கினார்‌.

Newsletter