கோவை வேளாண் பல்கலையில் நெல்‌ இனவிருத்தி ஆராய்ச்சியாளர்‌ இராமையா இருக்கை உருவாக்கம்!

கோவை வேளாண் பல்கலைக்கழத்தில் நெல்‌ இனவிருத்தி ஆராய்ச்சியாளர்‌ இராமையா இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக இராமையாவின் குடும்பத்தினர் ரூ.5 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த தொகை வேளாண் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தில்‌ நெல்‌ இனவிருத்தி ஆராய்ச்சியாளர்‌ இராமையா இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின்‌ முதல்‌ நெல்‌ ஆராய்ச்சி நிலையமான தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தின்‌ நெல்‌ இனவிருத்தி ஆராய்ச்சி நிலையம்‌ 1912 ஆம்‌ ஆணர்டு நிறுவப்பட்டது. உலகப்‌ புகழ்பெற்ற நெல்‌ ஆராய்ச்சியாளரான டாக்டர்‌ கே.இராமையா அவர்கள்‌ இந்த நிலையத்தில்‌ 24 ஆண்டுகள்‌ (1914-1938) சீரிய சேவையாற்றியுள்ளார்‌.

பனமுகத்திறன்‌ கொண்ட டாக்டர்‌ இராமையா, வேளாண் ஆராய்ச்சியாளர்‌ மற்றும்‌ பாராளுமன்ற உறுப்பினராகவும்‌ சேவையாற்றியுள்ளார்‌. மேலும்‌ இவர்‌ ஒரிசா மாநில கட்டாக்கில்‌ உள்ள தேசிய நெல்‌ ஆராய்ச்சி நிறுவனத்தின்‌ நிறுவன இயக்குனராகவும்‌ பணியாற்றியுள்ளார்‌.

இவர்‌ இந்தியாவின்‌ நெல்‌ கலப்பின இனப்பெருக்க ஆராய்ச்சியின்‌ முன்னோடி ஆவார்‌. இவரது முனைப்பான ஆராய்ச்சி மூலம்‌ மகுரி மளிஞ்சா (மலேசியா Tames), ஏ.டீடி 27 (இந்தியா) மற்றும்‌ சிர்கீனா (சீனா) போன்ற உயர்‌ விளைச்சல்‌ ரகங்கள்‌ உருவாக்கப்பட்டன. இவரால்‌ கண்டறியப்பட்ட ஜி இ பி 24 (கிச்சிலி சம்பா) இரகம்‌, உலகம்‌ முழுவதும்‌ சுமார்‌ 83 புதிய இரகங்களின்‌ உருவாக்கத்திற்கு முன்னோடியாக விளங்கியது.

இந்தியா அரசாங்கம்‌, பத்ம ஸ்ரீ (1957) மற்றும்‌ பத்ம பூஷன்‌ (1970) விருதுகள்‌ வழங்கியதன்‌ மூலம்‌ இவரது சேவையை கெளரவித்தது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ டாக்டர்‌. இராமையா நினைவாக பயிர்‌ மரபணு வளங்களின்‌ களஞ்சியமாக இராமையா மரபணு வங்கியை 2009 ஆம்‌ ஆண்டு உருவாக்கியது. மேலும்‌ நெல்‌ இனவிருத்தி நிலையத்தில்‌ இவரது திருஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

உணவு உற்பத்தியில்‌ இந்தியா தன்னிறைவு பெறுதல்‌ என்ற கனவை கொண்டிருந்த இராமையா தன்னுடைய புதுமையான ஆராய்ச்சிகள்‌ மூலம்‌ உலக வரைபடத்தில்‌ இந்தியா தனியிடம்‌ பெற செய்தார்‌. டாக்டர்‌. இராமையா அவர்களின்‌ கனவை நினைவாக்கும்‌ வகையில்‌ அவரது மகன்‌ ரா.பஞ்சரத்தினம்‌ மற்றும்‌ அவரது குடும்பத்தினர்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ வேளாண்‌ ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ இராமையா இருக்கையை உருவாக்குவதற்காக ரூபாய்‌ 5 கோடியை வழங்கி உள்ளனர்‌.

இத்தொகையானது பல்கலைக்கழகத்தின்‌ நிதிய மூலதனமாக பராமரிக்கப்பட்டு அதன்‌ மூலம்‌ கிடைக்கப்‌ பெறும்‌ வட்டியானது ஆராய்ச்சி நிதியாக பயன்படுத்தப்படும்‌. தமிழ்நாடு வேளாண்மை‌ பலகலைக்கழகத்தின்‌ துணை வேந்தர்‌, கீதாலட்சுமி இந்த நன்கொடையை வழங்கிய டாக்டர்‌ ராமையாவின்‌ குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், இத்தொகையானது நாட்டின்‌ வேளாண்‌ பெருமக்களின்‌ முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும். டாக்டர்‌. இராமையா குடும்பம்‌ மற்றும்‌ தமிழக அரசால்‌ விதையாக ஊன்றப்பட்ட இந்த நிதி மூலதனத்தை விருட்சமாக வளர செய்து, பல்கலைகழகத்தின்‌ கல்வி, ஆராய்ச்சி மற்றும்‌ விரிவாக்க‌ பணிகள்‌ வளர்ச்சிக்கு வித்திடும்‌. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter