கோவை வேளாண் பல்கலையில் சாண எரிவாயு மேம்பாடு பயிற்சி - 3 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ சாண எரிவாயு மேம்பாடு குறித்த சுழற்சாவி தொழிலாளர்‌ பயிற்சி, உதவி பொறியாளர்‌, ஊரக முகமை அதிகாரிகள் மற்றும் சாண எரிவாயு கட்டுமானத்திற்கான கொத்தனார்‌ பணிகளுக்கு கடந்த மார்ச் 16 முதல் 30 வரை 3 பிரிவுகளாக பயிற்சி அளிக்கப்பட்டன.


கோவை: கோவை வேளாண் பல்கலை கழகத்தில், சாண எரிவாயு மேம்பாடு குறித்து 3 பிரிவுகளில் பல்வேறு பணிகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்திலுள்ள புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ பொறியியல்‌ துறை, புதிய மற்றும்‌ புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின்‌ நிதியுதவி பெற்று, சாண எரிவாயு மேம்பாடு மற்றும்‌ பயிற்சி மையம் (BDTC) செயல்பட்டு வருகிறது.

சாண எரிவாயு மேம்பாடு மற்றும்‌ பயிற்சி மையத்தின்‌ (BDTC) மூலம்‌ வேலையில்லா இளைஞர்களுக்கான சுழற்சாவி தொழிலாளர்‌ பயிற்சி மார்ச் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதேபோல், உதவி பொறியாளர்‌ மற்றும்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளுக்கான பணியாளர்‌ பயிற்சி மார்ச் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும், சாண எரிவாயு கட்டுமானத்திற்கான கொத்தனார்‌ பயிற்சி மார்ச் 21ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது.

பயிற்சியின்‌ சிறப்பு அம்சமாக சாண எரிவாயு உற்பத்தி, அதன்‌ பயன்பாடு, சுத்திகரிக்கப்பட்ட பயோ மீத்தேன்‌ தயாரிப்பு, சூரிய வெப்பம்‌ மற்றும்‌ ஒளிமின்னழுத்த தொழில்நுட்பஙகள்‌ மற்றும்‌ இதர புதிய புதுப்பிக்கவல்ல தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும்‌ சாண எரிவாயு கலனின்‌ கட்டுமானம்‌ மற்றும்‌ பராமரிப்பு குறித்த நடைமுறை பிரச்சனைகளை‌ பற்றி அறிய பயிற்சியாளர்கள்‌ கள பயிற்சியிலும்‌ ஈடுபடுத்தப்பட்டனர்‌.

பயிற்சியின்‌ நிறைவாக, மார்ச் 30 ஆம் தேதி வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ நிறைவு விழா நடைபெற்றது. புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ பொறியியல்‌ துறையின்‌ தலைவர்‌ மறறும்‌ சாண எரிவாயு மேம்பாடு மற்றும்‌ பயிற்சி மையத்தின்‌ ஒருங்கிணைப்பாளர்‌ முனைவர்‌ ரமேஷ்‌ வரவேற்புரை வழங்கினார்‌.



வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ முதலவர்‌ முனைவர்‌ ரவிராஜ்‌ சிறப்புரையாற்றி பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களையும்‌ வழங்கினார்‌. இறுதியாக, முனைவர்‌ விஜயகுமாரி நன்றியுரை வழங்கினார்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Newsletter