தாராபுரம் அருகே நெல் வயல்களில் எலி தொல்லை - வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுரை!

தாராபுரம் அருகேயுள்ள தளவாய்ப்பட்டினம் பகுதியில் நெல் வயல்களில் ஆய்வு மேற்கொண்ட தாராபுரம் வேளாண்மை உதவி இயக்குநர் கணேசன், எலித்தொல்லையை பறவை தாங்கிகள் மற்றும் கிட்டி வைத்து கட்டுப்படுத்தலாம் என அறிவுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நெல் வயல்களில் எலி தொல்லையை கட்டுப்படுத்த வேளாண் உதவி ஆய்வாளர் கணேசன் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தாராபுரத்தை அடுத்த தளவாய் பட்டிணம் கிராம பகுதியில் நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் எலிகள் நெற்பயிர்களை தின்று நாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வயல்களில் நேற்று தாராபுரம் வேளாண்மை உதவி இயக்குநர் ப.கணேசன் ஆய்வு செய்தார்.



அப்போது அவர் கூறியதாவது, தாராபுரம் வட்டாரத்தில் அமராவதி ஆற்றின் பழைய மற்றும் புதிய அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை தற்சமயம் அறுவடை நிலை மற்றும் முதிர்ச்சி பருவத்தில் உள்ள வயல்களில் எலிகளின் அட்டகாசத்தால் பயிர்கள் நாசமாகி வருகிறது.

இந்த பாதிப்பிலிருந்து நெல் வயல்களை பாதுகாக்க நெல் வயல்களில் இடையே பறவை தாங்கிகள் (ஆந்தை) அமைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம். இதற்கு தென்னை மட்டைகள் அல்லது மரக்குச்சிகள் பயன்படுத்தி ஆந்தைகள் அமரும் வண்ணம் இருக்கை அமைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம்.

*எலி கிட்டி வைத்து கட்டுப்படுத்தலாம்*

ஜிங்க் பாஸ்பைடு 2 பங்கு, 96 பங்கு பொரி, சுத்தமான தேங்காய் எண்ணெய் 2 பங்கு கலந்து வயல்களின் ஓரத்தில் வயலின் நீரை வடித்து மருந்துகளை வைக்க வேண்டும். மேலும் எலி கிட்டி வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம்.

நெல் வயல்களின் வரப்புகளை சுத்தமாகவும் சூரிய ஒளி நன்றாக படும்படியும் வைக்க வேண்டும்.ரசாயன மருந்துகளை பயன்படுத்தும் போது நெல் வயல்களில் உள்ள நீரை வடிக்க வேண்டும். இந்த முறைகளை பயன்படுத்தி எலிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு தாராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Newsletter