மெட்டுபாவி கிராமத்தில்‌ குத்து அவரையில்‌ ஒருங்கிணைந்த பயிர்‌ பாதுகாப்பு செயல்‌ விளக்கம்

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ பயிர்‌ பாதுகாப்பு மையம்‌ மற்றும் உலக காய்கறிகள்‌ மையம்‌ சார்பில் குத்து அவரையில்‌ ஒருங்கிணைந்த பயிர்‌ பாதுகாப்பு செயல்‌ விளக்கம்‌ குறித்த வயல் விழா மெட்டுபாவி கிராமத்தில்‌ நடைபெற்றது.


கோவை: மெட்டுபாவி கிராமத்தில்‌ விவசாயிகளுக்கு உலக காய்கறிகள்‌ மையம்‌ மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ பயிர்‌ பாதுகாப்பு மையம் சார்பில், குத்து அவரையில்‌ ஒருங்கிணைந்த பயிர்‌ பாதுகாப்பு செயல்‌ விளக்கம்‌ அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில்‌ விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தைத் தருவதில்‌ காய்கறி சாகுபடி மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த வரிசையில்‌ குத்து அவரை ஒரு தொடர்ச்சியான வருமானத்தை விவசாயிகளுக்குத் தருவதால்‌ விவசாயிகள்‌ இதனை குறைந்த பரப்பளவில்‌ அனைத்து பருவங்களிலும்‌ பயிர்‌ செய்து வருகின்றனர்‌.

இந்த குத்து அவரையில்‌ சாறு உண்ணும்‌ பூச்சிகளான அசுவினி, பச்சை தத்துப்பூச்சி, வெள்ளை ஈ மற்றும்‌ புள்ளிக்‌ காய்ப்புழு ஆகியவை விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நோய்களைப்‌ பொருத்தவரை புள்ளி நோய்‌, சாம்பல்‌ நோய்‌ மற்றும்‌ மஞ்சள்‌ தேமல்‌ நோய்‌ ஆகியவை இப்‌பயிரை பாதிக்கும்‌ முக்கிய நோய்களாகும்‌.



இந்த பூச்சி மற்றும்‌ நோய்‌ தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகள்‌ பெரும்பாலும்‌ பூச்சி மருந்துகளையே சார்ந்துள்ளனர்‌. எனவே விவசாயிகளிடையே மற்ற ஒருங்கிணைந்த பயிர்‌ பாதுகாப்பு முறைகளை வலியுறுத்தும்‌ வகையில்‌, உலக காய்கறிகள்‌ மையம்‌ மற்றும்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ பயிர்‌ பாதுகாப்பு மையம்‌ இணைந்து குத்து அவரையில்‌ ஒருங்கிணைந்த பயிர்‌ பாதுகாப்பு செயல்‌ விளக்கம்‌ கிணத்துக்கடவு வட்டாரத்தில்‌ உள்ள மெட்டுபாவி கிராமத்தில்‌ அமைக்கப்பட்டது.



இந்த செயல்‌ விளக்கத்தின்‌ செயல்‌ திறனை அனைத்து விவசாயிகளுக்கும்‌ கொண்டு சேர்க்கும்‌ வகையில்‌ வயல்‌ விழா, இன்று ராஜ்குமார்‌ என்பவரது வயலில்‌ நடத்தப்பட்டது. இந்தவிழாவில்‌ தலைமை உரை ஆற்றிய தமிழ்‌ நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ விரிவாக்கக் கல்வி இயக்குநர்‌ முனைவர்‌ முருகன், விவசாயிகள்‌ ஒருங்கிணைந்த பயிர்‌ பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தைக் குறித்தும்‌, அதன்‌ மூலம்‌ விவசாயிகள்‌ தங்களுக்கான இடுபொருள்‌ செலவு குறைத்து அதிக லாபம்‌ ஈட்ட இயலும்‌ என்பதைத் தெரிவித்தார்‌.

மேலும்‌ விவசாயிகள்‌ குழுவாகச் செயல்படுவதன்‌ மூலம்‌ அதிக லாபத்தை தங்களுடைய விலைப்‌ பொருட்களுக்கு நிர்ணயிக்க முடியும்‌ என்பதையும்‌ வலியுறுத்தினார்‌.



மெட்டுபாவி பஞ்சாயத்துத் தலைவர்‌ மற்றும்‌ முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ கருப்பண்ணன்‌, இயற்கை விவசாயத்தைப் பின்பற்றுவதின்‌ அவசியத்தைக் கூறினார்‌. இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை அளித்த வேளாண்‌ பல்கலைக்கழக பயிற்சி மையத்தின்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ ஆனந்தராஜா, இந்த திட்டத்தின்‌ நோக்கத்தினை பற்றியும்‌, இதன்‌ மூலம்‌ விவசாயிகளுக்கு ஏற்படும்‌ பலன்களைப்‌ பற்றியும்‌ எடுத்துரைத்தார்‌.

பயிர்‌ நோயியல்‌ துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, முனைவர்‌ கா. கார்த்திகேயன்‌ விவசாயிகள்‌ பூச்சிக்கொல்லி மருந்தினை குறைப்பதின்‌ மூலம்‌ காய்கறிகளில்‌ எஞ்சிய நஞ்‌சினை தவிர்க்க இயலும்‌ என்பதை வலியுறுத்தினார்‌.

நோயியல்‌ துறை பேராசிரியர்‌ முனைவர்‌ அங்கப்பன் குத்து அவரையில் நோய்‌ தாக்குதலை குறித்தும்‌ அவற்றை மேலாண்மை செய்யும்‌ முறைகளை குறித்தும்‌ எடுத்துரைத்தார்‌. மேலும்‌ உயிர்‌ பூஞ்சான் கொல்லிகளை உபயோகிப்பதின்‌ மூலம்‌ விவசாயிகள்‌ பயிர்களில்‌ நோய்‌ தாக்குதலை குறைக்க இயலும்‌ என்பதனை வலியுறுத்தினார்‌.

Newsletter