கோவை வேளாண் பல்கலையில் தேசிய அளவிலான வானிலை மாநாடு!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் வானிலை விஞ்ஞானிகள் சங்கம் சார்பில் 'அக்மெட் 2022' என்ற பெயரில் வருடாந்திர அறிவியல் மாநாடு இன்று தொடங்கிய நிலையில் வேளாண் வானிலை உத்திகள் தொடர்பாக விஞ்ஞானிகள் விவாதம்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் வேளாண் வானிலை விஞ்ஞானிகள் சங்கம் சார்பில், அக்மெட் 2022 என்ற பெயரில் வருடாந்திர அறிவியல் மாநாடு இன்று தொடங்கியது.

இந்த மாநாட்டினை வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மூத்த காலநிலை நிபுணர் பி.வி.ரமணா ராவ் முன்னிலை வகித்தார். 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாடானது வேளாண் வானிலை உத்திகள் எனும் தலைப்பில் நடக்கிறது.

தற்போது மாறிவரும் காலநிலை சூழலில் பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பின் காரணமாக பசுமைக்குடில் வாயுக்களின் தாக்கம். கரியமில வாயு மற்றும் காற்றின் வெப்பநிலையின் அதிகரிப்பு, உமிழ்வின் தாக்கம், காலநிலை மாற்றம், பல்வேறு பயிர்களில் தாக்கம், எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்கள் உருவாக்குதல், உணவு உற்பத்தியை தக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து வானிலை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் விவாதிக்கின்றனர்.

உணவு உற்பத்தியை நிலை நிறுத்த இந்திய வானிலை ஆய்வுத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை, மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்களில் இருந்து 250 ஆராய்ச்சியாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டிற்காக 250 ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டு உள்ளது.

கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் கலாராணி, கருத்தரங்கு செயலாளர் ராமநாதன் ஆகியோர் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Newsletter