'விளைச்சல் இருந்தும் உரிய விலை இல்லை..!' - தாராபுரம் விவசாயிகள் வேதனை

தாராபுரம் அடுத்த சேடப்பாளையம் பகுதியில்100 ஏக்கர் பரப்பளவில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், உரிய விலை கிடைக்காததால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே 100 ஏக்கரில் கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உரிய விலை கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தாராபுரம் அடுத்த சேடப்பாளையம், தலைவாசல் தோட்டத்தில் விவசாயம் செய்து வருபவர் விஸ்வநாதன் - சுதா தம்பதி.



இவர்கள் தங்களது சொந்த விவசாய நிலத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் கத்திரிக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.



தற்போது சந்தைகளில் உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறியுள்ள அவர்கள், இதன் மூலம் லட்சக் கணக்கில் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது,

கத்தரிக்காய் கிலோவுக்கு 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விளைச்சல் குறைவாக உள்ள இந்த பருவத்திலும் கிலோ 20 ரூபாய்க்கு மட்டுமே விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது. இதனால் அவர்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.



மேலும் உழவு செய்து விதைப்பு பணி செய்து கத்திரிக்காய் பூ எடுக்கும் போது பூக்கள் பணி மற்றும் காற்று வெயில் போன்ற சீதோஷ்ண நிலைக்கு பூக்கள் கீழே விழுகாமல் இருக்க பாதுகாப்பு செய்து கத்தரிக்காய் பிஞ்சு விடும் போது பூச்சி நோய் தொற்று உரம் மற்றும் இடு பொருட்கள் என ஏக்கர் ஒன்றிற்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்கின்றனர்.

இந்நிலையில், கத்திரிக்காய் பறிக்கும் பருவத்திற்கு வந்தவுடன் ஆட்கள் கூலி 400 முதல் 600 வரை செலவு செய்யப்பட்டு ஒரு ஆள் ஒரு நாளைக்கு நாலு பைகள் மட்டுமே கத்திரிக்காய் பறிக்க முடியும். ஆனால் நான்கு பைகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் பொழுது பை ஒன்று 150 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.



இதனால் 4 பைகளுக்கு மொத்தமாகவே 600 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது, அதுவும் கத்தரிக்காய் பறித்த கூலி ஆட்களுக்கு கூலியாக சென்று விடுகிறது. இதில் விற்பனைக்காக கொண்டு செல்லும் கத்தரிக்காய் பை ஒன்றிற்கு வண்டி வாடகை ரூபாய் 50 என கொடுக்க வேண்டி உள்ளது.

இதனால் கத்திரிக்காய் விவசாயம் செய்தும் தொடர்ந்து நஷ்டமே ஏற்படுகிறது. எனவே இதனை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதன் மூலம் நஷ்டத்தை சரி கட்ட முடியும் என விவசாயிகள் நம்புகின்றனர்.

இதற்காக தமிழக அரசு குளிர்பதன கிடங்கு அமைத்து விவசாயிகளிடம் கத்திரிக்காய் மற்றும் தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும். அவ்வாறு அரசு காய்கறிகளை கொள்முதல் செய்தால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும்.

இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter