கோமாதாவின் கோ கிருபா இயற்கை வழி விவசாயம் - தாராபுரம் மாணவ மாணவிகள் அசத்தல்!

தாராபுரம் அருகே சிக்கினாபுரம் கிராமத்திலுள்ள நாச்சாஸ் கோசாலை எனும் நாட்டு மாடுகளின் பண்ணையில் வல்லவராய விவசாயக் கல்லூரி மாணவ,மாணவிகள் நவீன இயற்கை உரத்தைத் தயாரித்து அசத்தியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-பொள்ளாச்சி வல்லவராய விவசாயக் கல்லூரி மாணவ, மாணவிகள் நவீன இயற்கை உரத்தைத் தயாரித்துள்ளனர்.

‘சிக்கினாபுரம்’கிராமத்திலுள்ள பண்ணை நாச்சாஸ் கோசாலை. நாட்டு மாடுகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படும். இப்பண்ணையில் கிர், சிந்தி, சாகிவால், காங்கேயம், தர்பார்க்கர் போன்ற நாட்டு இன மாடுகள் உள்ளன.

மேலும், மண்ணில்லா வேளாண்மை (Hydroponics), மாட்டுச்சாணைக்கலவைப் பிரிவு (Slurry) பண்ணைக்குளம் (Farm pond), அசோலா (Azolla) ஆகியவை இவ்விடத்தின் சிறப்பம்சங்கள் திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் வியப்பூட்டும் கோ – கிருபா, பஞ்சகாவ்யா, தசகாவ்யா போன்ற வேளாண் இடுபொருள்களின் வரிசையில் கைகோர்த்துள்ளது. கோ- கிருபா அமிர்தம். கோ- பசு; கிருபா- தயவு; பசுவின் தயவால் கிடைப்பதால் கோ- கிருபா என்றழைக்கப்படுகிறது.

இத்திரவம் நன்மை பயக்கும் பாசிட்டிவ் பாக்டீரியாக்களால் ஆனது. மண்ணில் தெளிக்கும்போது இந்நுண்ணுயிரிகள் பெருக்கம் அடைகின்றன. அவை பயிர்கள் ஊட்டச்சத்தை எளிதில் எடுத்துக் கொள்ளும்படி செய்து பயிர் வளர்ச்சியை மேம்படுத்துகின்றன.

செய்முறை:

கோ- கிருபா தாய் திரவம் – 1 லிட்டர்

வெல்லம் – 2 கிலோ

நாட்டு மாட்டு மோர் – 2 லிட்டர் (புளிக்காதது)

தண்ணீர் – 200 லிட்டர்

கோ- கிருபா தெளிக்கப்படும் நிலத்தின் மண் – ஒரு கைபிடி அளவு

நன்கு சுத்தம் செய்து காயவைத்த டிரம்மில் 200 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் 2 கிலோ வெல்லத்தைக் கரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, கோ- கிருபாவின் தாய் திரவம், மோர் மற்றும் மண் சேர்த்து தினமும் ஒரு வேளை கலக்க வேண்டும். இந்தக் கரைசல் ஐந்தாம் நாள் தயாராகி விடும்.

பயன்படுத்தும் முறை:

2:15 விகிதத்தில் கோ- கிருபா கரைசல் மற்றும் தண்ணீர் கலந்து ஒரு ஏக்கர் பயிர்களுக்குத் தெளிக்க வேண்டும். நீர்ப்பாசன வழியாகவும் உரமிடலாம்.

பயன்கள்:

30-40 மடங்கு பயிர் வளர்ச்சியை அதிகரிப்பதால் பயிர் ஊக்கியாகக் கருதப்படுகிறது.

நோய் மேலாண்மை

1 லிட்டர் கோ- கிருபாவுடன் 50 கிராம் மஞ்சள் தூள், 150 லிட்டர் வேப்பெண்ணெய் சேர்த்து கால்நடைகளின் மேல் தெளிப்பதன் மூலம் தோல் நோய்களை (LSD)குணப்படுத்தலாம்.

இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், நன்மைகளைக் கொண்ட இயற்கை வழி இடுபொருட்களைப் பயன்படுத்தி இரசாயனத் தாக்குதலிலிருந்து நம் தாய்மண்ணைக் காப்போம். தயாரிப்போம். கோ- கிருபா அமிர்தம். பயன் பெறுவோம் பலவிதம் . மகசூல் பெறுவோம், என்றனர்.

Newsletter