திருப்பூரில் பூ சாகுபடியில் அசத்தும் விவசாயிகள் - சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர கோரிக்கை..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கோழிக்கொண்டை, செண்டுமல்லி பூ சாகுபடி செய்து வரும் விவசாயிகள், தங்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான ஆண்டிய கவுண்டனூர், தீபாலபட்டி புங்கம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிணற்று பாசனத்துக்கு காய்கறி சாகுபடி பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, கோழிக் கொண்டை, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி சீசன் அடிப்படையில் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, புரட்டாசி மாதம் ஆயுத பூஜை சீசனை இலக்காக வைத்து பூக்கள் சாகுபடியை இப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர்.



இந்நிலையில் கோழிக்கொண்டை, செண்டு மல்லி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது, கடந்த ஏழு ஆண்டுகளாக பூக்கள் சாகுபடி செய்து வருகிறோம்.



நடவு செய்த 2 மாதத்துக்கு பிறகு பூக்களை அறுவடை செய்து நான்கு மாதங்கள் வரை குறிப்பிட்ட இடைவெளியில் பராமரித்து வருகிறோம்.

சீதோஷ்ண நிலை ஒத்துப்போனால் ஏக்கருக்கு, ஒன்றரை டன் வரை மகசூல் கிடைக்கும். முகூர்த்த சீசனில் கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை கோழிக்கொண்டை பூ விற்பனையாகும். பிற நாட்களில் உரிய விலை கிடைப்பதில்லை.

தற்போது, பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், பூக்களில் கருகல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. கட்டுப்படுத்த மருந்து தெளித்து வருகிறோம். இத்தகைய சீசனில், தரமான பூக்கள் உற்பத்தி செய்ய சிரமப்பட வேண்டியுள்ளது. ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை செலவாகிறது.



இருப்பினும் கோழிக்கொண்டை பூசாகுபடியில் உரிய லாபம் கிடைப்பதில்லை. மேலும் குறித்த நேரத்தில், பூக்களை பறித்தாலும், உடுமலையில் சந்தை வாய்ப்பு இல்லாத காரணத்தால் திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.



உடுமலையில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் பட்சத்தில், இந்தப் பகுதியில் பூக்கள் சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter