உடுமலை வட்டாரத்தில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரிப்பு

உடுமலை அருகே உள்ள பள்ளபாளையம் சுற்றுப்பகுதியில் தென்னை மரங்களில் மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல் வேகமாகப் பரவி வருவதால் விவசாயிகள் கவலை.


திருப்பூர்: வெள்ளை ஈ தாக்குதலுக்குத் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டும் கட்டுக்குள் வரவில்லை என்று உடுமலை சுற்றுவட்டார விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாரத்தில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகச் சாகுபடியில், வெள்ளை ஈ தாக்குதலால், பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை சீசனில், தாக்குதல் சற்று குறைந்திருந்தது. இந்நிலையில், தற்போது பள்ளபாளையம் சுற்றுப்பகுதியில், மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல் வேகமாகப் பரவி வருகிறது. இப்பகுதியில், இளநீர் தேவைக்காக, வீரிய ஓட்டு ரக தென்னை மரங்களை விவசாயிகள் அதிகளவு பராமரித்து வருகின்றனர்.



மரங்களின் ஓலைகளின் உட்புறத்தில், வெள்ளை ஈக்கள் பச்சையத்தை உறிஞ்சி விடுகிறது. மேலும் கருப்பு நிறத்தில், திரவம் ஓலையிலிருந்து விழும் வரை, தாக்குதல் குறித்து முழுவதுமாக தெரிவதில்லை.



இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அனைத்து ரக தென்னை மரங்களிலும், வெள்ளை ஈ தாக்குதல் துவங்கி, வேகமாகப் பரவி வருகிறது. இளநீருக்காகப் பராமரிக்கப்படும் மரங்களில், பாதிப்பு அதிகமுள்ளது.

தேங்காய், இளநீர் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. தாக்குதலைக் கட்டுப்படுத்த, மருந்து தெளித்தல், வேரில் மருந்து கட்டுதல் உள்ளிட்ட பல் வேறு பணிகளை மேற் கொண்டும், எவ்வித பலனும் கிடைக்கவில்லை, என்று தெரிவித்தனர்.

Newsletter