மதுக்கரை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு ட்ரோன் பயிற்சி

மதுக்கரை வட்டாரத்தில் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி.


கோவை: பருத்திச் செடிகளில் ஏற்படும் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த நவீனத் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டாரத்தில் உள்ள நாச்சிபாளையம், வழிக்குப்பாரை, ஒத்தக்கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் பருத்தி செடியில் ஏற்படும் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த மருத்து தெளிப்பான்கள் மூலம் மருந்து தெளித்து வருகின்றனர். இதனால் நாள் முழுக்க செலவிட வேண்டியுள்ளது.

இதைத் தவிர்க்கும் விதமாக ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்க வேளான் உழவர் நலத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.



அதனடிப்படையில் மதுக்கரை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பருத்தி சாகுபடி விவசாயிகளுக்குச் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.



இதற்காக ட்ரோன் மூலம் மருந்து நிரப்பி ஒரு இடத்தில் நின்றுகொண்டு அனைத்து பருத்திச் செடிகளுக்கும் மருந்து தெளிப்பது எப்படி? ட்ரோனை எப்படிக் கையாள வேண்டும்? என்பது குறித்து கோவை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் புனிதா தலைமையிலும், வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் ரத்தினம் முன்னிலையிலும் செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நவீன தொழில் நுட்பம் வேளாண்மையில் பெரியளவில் உதவும் என்று விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர். நவீன தொழில் நுட்பத்தினை அதிகளவில் வேளாண்மை பயன்பாட்டில் கொண்டுவர வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Newsletter