கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில்‌ சர்வதேச சிறுதானிய ஆண்டு துவக்க விழா

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023 துவக்க விழா நடைபெற்றது.



கோவை: இந்தியாவின்‌ முன்மொழிதலை ஏற்று ஐக்கிய சபை 2021ஆம்‌ ஆண்டு மார்ச்‌ மாதம் சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை விளக்கி 2023 ஆம்‌ ஆண்டை 72 ஐக்கிய சபை நாடுகளின்‌ ஆதரவால்‌ “சர்வதேச சிறுதானியங்களின்‌ ஆண்டு" என நிறைவேற்றியுள்ளது.

இந்திய அரசாங்கமானது எல்லா மாநிலங்களிலும்‌ இந்த சர்வதேச சிறுதானியங்களின்‌ ஆண்டை 2023இல்‌ சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. இதன்‌ தொடக்கமாக, இந்தியாவில்‌ உள்ள வேளாண்மை‌ பல்கலைக் கழகங்களிலே முதல்முறையாகத் தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவை இன்று கோவையில்‌ நடத்தியது.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ கீதாலட்சுமி தலைமையேற்று, சிறுதானிய கருத்துக்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்திய அளவில்‌ 2020-21ல்‌, 21 மாநிலங்களில்‌ 12.53 மில்லியன்‌ ஹெக்டரில்‌ சிறுதானியங்கள்‌ பயிரிடப்பட்டு 15.53 மில்லியன்‌ டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில்‌ 2020-21இல்‌ 5.6 லட்சம்‌ ஹெக்டரில்‌ பயிரிடப்பட்டு 11.6 லட்சம்‌ மெட்ரிக்‌ டன் சிறுதானியங்கள்‌ உற்பத்தி செய்யப்பட்டது.

பழங்கால தமிழர்களின்‌ மிக முக்கிய உணவுப் பட்டியலில் சாமை, வரகு, கேழ்வரகு அரிசி சாதம்‌, கம்பு மற்றும்‌ சோள சுடு சாதம்‌, சிறுதானிய கூழ்‌ மற்றும்‌ களி ஆகியவை இருந்தன. இதன்‌ சுவை மற்றும்‌ ஊட்டச்சத்து மிகுந்து உள்ளதால்‌ இன்னும்‌ கிராமப்புறங்களிலுள்ள மக்கள்‌ உண்டு வருகிறார்கள்‌. இதை 'பசிதாங்கி'என்று அழைக்கின்றனர்‌.

அரிசி மற்றும்‌ கோதுமையைக் காட்டிலும்‌ சிறுதானியங்களில்‌ அதிகளவு ஊட்டச்சத்து மற்றும்‌ மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ உள்ள அனைத்து உறுப்பு கல்லூரிகள்‌,

ஆராய்ச்சி நிலையங்கள்‌ மற்றும்‌ வேளாண்மை அறிவியல்‌ நிலையங்களில்‌ சிறுதானியத்தின்‌ தொழில்நுட்பங்கள்‌ மற்றும்‌ புதிய ரகங்கள்‌ அனைத்து விவசாயிகளுக்கும்‌ சென்று சேரும்‌ வண்ணம்‌ கருத்துக்காட்சி, பயிற்சிகள்‌, சிறுதானிய விழாக்கள்‌ மற்றும்‌ கருத்தரங்குகள்‌ இந்த ஆண்டு முழுவதும்‌ தொடர்ச்சியாக நடத்தப்படும், என்றார்.



இந்த நிகழ்ச்சியில், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின்‌ துணை இயக்குநர்‌ ஆர்.சி. அகர்வால், பயிர்‌ இனப்பெருக்கம்‌ மற்றும்‌ தாவர மரபியல்‌ துறை இயக்குநர்‌ ரவிகேசவன்‌, முனைவர்‌. பி.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter