கத்தரி, வெண்டை சாகுபடி விவசாயிகள் கவனத்துக்கு

கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் விலை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வணிகம்) வீ. மனோகரன் தெரிவித்துள்ளது:

தமிழகத்தில் 11 ஆயிரம் ஹெக்டேரில் கத்தரி சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம், 1.05 லட்சம் கத்தரிக்காய் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. திண்டுக்கல், கோயம்புத்தூர், தருமபுரி, சேலம், தேனி, புதுக்கோட்டை, வேலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கத்தரி அதிகளவில் பயிரிடப்படுகிறது. வர்த்தக ஆய்வுகளின் அடிப்படையில், தற்போது கோயம்புத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் சந்தைகள் மூலம் அதிகளவில் கத்தரி வரத்து உள்ளது.

திருவிழா மற்றும் திருமண நிகழ்ச்சிகள் வருவதையொட்டி, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கத்தரிக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வு முடிவுகளின்படி, கோயம்புத்தூரில் கத்தரியின் பண்ணை விலை அறுவடை சமயத்தில் கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 23 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெண்டை:  திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்கள் வெண்டை உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. ஒட்டன்சத்திரம் மற்றும் கோயம்புத்தூர் சந்தைகளில் வரத்து நவம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போதிய மழையில்லாததால், வெண்டையின் உற்பத்தி குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விவசாயிகள் நடவு முடிவுளை எடுப்பதற்கு உதவும் வகையில், கடந்த 13 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் மற்றும் கோயம்புத்தூர் உழவர் சந்தைகளில் நிலவிய வெண்டை விலையை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெண்டையின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.18 முதல் ரூ.20 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்த சந்தை நிலவரத்தின்படி, விவசாயிகள் நடவு முடிவுகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter