கோவை வேளாண் பல்கலை. சார்பில் தக்காளியில்‌ ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு செயல்‌ விளக்க வயல்விழா - 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

கோவை வேளாண்‌ பல்கலை. சார்பில் தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர்‌ கிராமத்தில் நடைபெற்ற ‘தக்காளியில்‌ ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு வயல்‌ விழா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற வல்லுநர்கள் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ தைவான் உலக காய்கறிகள்‌ மையம்‌‌ இணைந்து “தக்காளி மற்றும்‌ அவரையில்‌ ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு ஆராய்ச்சி திட்டத்தை கடந்த ஆகஸ்டு மாதம்‌ மூலம்‌ செயல்படுத்தி வருகிறது.



இந்த திட்டத்தின்‌ ஒரு பகுதியாக பாக்டீரியா நோய்க்கு எதிர்ப்பு திறனுள்ள கத்தரி ரகத்தில்‌ விவசாயிகள்‌ தோ்வு செய்த தக்காளி ஒட்டுக் கட்டப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வயலில்‌ மற்ற ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளான உயிர்‌ எதிர்கொல்லி பூஞ்சாணங்களை கொண்டு விதை நேர்த்தி செய்தல்‌, கடைசி உழவில்‌ வேப்பம்‌ புண்ணாக்கு இடுதல்‌, சாறுண்ணும்‌ பூச்சிகளை கட்டுப்படுத்த மஞ்சள்‌ மற்றும்‌ நீல வண்ண அட்டை பொறி வைத்தல்‌, ஊசிக்‌ காய்த்துளைப்பான்‌ மற்றும்‌ பச்சைக்‌ காய்‌ புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளை வைத்தல்‌, தாவர பூச்சிக்கொல்லிகள்‌ மற்றும்‌ உயிர்பூச்சிக்‌ கொல்லிகள்‌ உபயோகம்‌ ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.

இந்த செயல்‌ விளக்கத்தை மற்ற விவசாயிகளுக்கும்‌ கொண்டு சேர்க்கும்‌ பொருட்டு “தக்காளியில்‌ ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு வயல்‌ விழா” தொண்டாமுத்தூர்‌ வட்டம்‌ வண்டிக்காரனூர்‌ கிராமத்தில்‌ கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது.



இந்த நிகழ்வில் வரவேற்புரையாற்றிய,‌ பயிர்‌ நோயியல்‌ துறை, பேராசிரியர்‌ முனைவர்‌.௧. அங்கப்பன்‌, இயக்குநர்கள்‌, விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ விவசாயிகளை வரவேற்று தக்காளியில்‌ நோய்களால்‌ ஏற்படும்‌ பாதிப்புகள் தொடர்பாக பேசினார்.

தொடர்ந்து பயிர்ப்பாதுகாப்பு மையத்தின்‌ இயக்குநர்‌ முனைவர்‌. மூ.சாந்தி பேசியதாவது , தக்காளியில்‌ புலம்‌ பெயர்ந்த பூச்சியான ஊசிக்‌ காய்த்துளைப்பான்‌ பாதிப்பை பற்றியும்‌ அதனைக்‌ கட்டுபடுத்தும்‌ முறைகள் குறித்து தெளிவாக எடுத்துக்‌ கூறினார்‌.

மேலும்‌ ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிப்பதால்‌ பூச்சிக் கொல்லிகள்‌ உபயோகிப்பதை குறைப்பதோடு மட்டுமல்லாமல்‌ பயிர் பாதுகாப்பு செலவையும்‌ குறைக்கலாம்‌. இவ்வாறு அவர் பேசினார்.

இதனையடுத்து விரிவாக்க கல்வி இயக்குநர்‌ முனைவர்‌. பி.பொ. முருகன் பேசியதாவது ‌, பல்கலைக்கழக விஞ்ஞானிகள்‌, விரிவாக்க அலுவலர்கள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ ஒன்றிணைந்து மேம்பட்ட தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதோடு மட்டுமில்லாமல்‌ தொழில்நுட்பங்களை அனைத்து விவசாயிகளிடையே கொண்டு சேர்க்க இயலும்.

‌இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து உலக காய்கறிகள்‌ நிறுவன பயிர்நோயியல்‌ முதன்மை விஞ்ஞானி முனைவர்‌. ரிக்கார்டோ ஒளிவா பேசியதாவது, மழைக்காலங்களில்‌ தக்காளியில்‌ ஏற்படும்‌ பாதிப்பைப்‌ பற்றியும்‌ ஒட்டு தக்காளி தொழில்நுட்பத்தை கொண்டு மேலாண்மை முறைகளை பற்றியும்‌ விளக்கினார்‌. மேலும்‌ உலகளவில்‌ காய்கறிகள்‌ நிறுவனம்‌ மேற்கொள்ளும்‌ பணிகளை பற்றியும்‌ தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்‌.

இதேபோல், வேளாண்‌ பூச்சியியல்‌ துறை தலைவர்‌ பொறுப்பு முனைவர்‌. ஜான்சன்‌ எட்வர்டு தங்கதுரை பேசியதாவது, தக்காளியில்‌ ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பற்றியும்‌, நோயியல்‌ துறை தலைவர்‌ முனைவர்‌. கா.கார்த்திகேயன்‌, தக்காளியில்‌ நோய்‌ மேலாண்மை பற்றியும்‌ மற்றும்‌ தக்காளியில்‌ நூற்புழு மேலாண்மை பற்றி நூற்புழுவியல்‌ துறையின்‌ தலைவர்‌. முனைவர்‌. அ. சாந்தி தங்களது சிறப்புரையில்‌ எடுத்துரைத்தனர்‌.

தோட்டக்கலைத்‌ துறை துணை இயக்குநர்‌ நந்தினி தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறையின்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்களை பற்றியும்‌ அங்கக வேளாண்மை பற்றியும்‌ எடுத்துரைத்தார்‌. செயல்‌ விளக்க விவசாயி கார்த்தி தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்‌.

இந்த நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 200க்கும்‌ மேற்பட்ட விவசாயிகள்‌ மற்றும்‌ இடுபொருள்‌ விற்பனையாளர்‌ கலந்து கொண்டு பயனடைந்தனர்‌. இறுதியாக பூச்சியியல்‌ துறை பேராசிரியர்‌ முனைவர்‌. மா. முருகன்‌ நன்றியுரை வழங்கினார்‌.

Newsletter