கோவை வேளாண் பல்கலை. சார்பில் விவசாயிகளுக்கு மண்‌ வளப்பாதுகாப்பிற்கான சமச்சீர்‌ உரமிடல்‌ பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ சார்பில் சாடிவயல்பதி மலைவாழ்‌ கிராமத்தில்‌ டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற மண்‌ வளப்பாதுகாப்பிற்கு சமச்சீர்‌ உரமிடல்‌ பயிற்சியில் 44 விவசாயிகள் கலந்துகொண்டு பேராசிரியர்கள் மற்றும் வல்லுனர்களுடன் உரையாடி பயனடைந்தனர்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் சாடிவயல்பதி மலை கிராமத்தில் நடைபெற்ற சமச்சீர் உரமிடல் பயிற்சி 44 உழவர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மண் வளம்‌ என்பது பயிர்‌ வளர்ச்சிக்குத்‌ தேவையான இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள்‌ போதுமான அளவில், பயிர்கள்‌ எடுத்துக்‌ கொள்ளும்‌ நிலையில்‌ இருப்பதாகும்‌. வளமான மண்ணே உணவு உற்பத்திக்கு அடிப்படையாகும்‌.

மண்ணின்‌ வளத்தைப்‌ பேணிப்‌ பாதுகாப்பது மனித இனத்தின்‌ முக்கியக்‌ கடமையாகும்‌. எனவே மண்ணின்‌ நலம்‌ மற்றும்‌ வளத்தைப்‌ பேணுவதின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ வகையில்‌ ஒவ்வொரு வருடமும்‌ டிசம்பர்‌ 5 ஆம்‌ தேதி “உலகமண்‌” தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.



எனவே உலக மண் தினத்தையொட்டி பேரூர்‌ வட்டம்‌ சாடிவயல்பதி மலைவாழ்‌ கிராமத்தில்‌ “மண்‌ வளப்பாதுகாப்பிற்கு சமச்சீர்‌ உரமிடல்‌” குறித்த பயிற்சி கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடத்தப்பட்டது.

இப்பயிற்சியானது தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைகழகம்‌ மண்‌ணியியல்‌ மற்றும்‌ வேளாண் வேதியியல்‌ துறையில்‌ இயங்கி வரும்‌ மண் ஆய்வு மற்றும்‌ பயிர்‌ ஏற்புத்திறன்‌ தொடர்பளவுத்திட்டம்‌ மற்றும்‌ ஐ.சி.ஏ.ஆர்‌ - இந்திய மண்ணியல்‌ நிறுவனம்‌, போபால்‌ ஆகியவற்றால்‌ சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்விற்கு வந்திருந்த உழவர்‌ பெருமக்களை, மண்ணியல்‌ மற்றும்‌ வேளாண்‌ வேதியியல்‌ மற்றும்‌ திட்டபொறுப்பாளர்‌ பேராசிரியர்‌ முனைவர்‌. சு. மரகதம்‌ வரவேற்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, மண்ணின்‌ தன்மை, மண்‌ உருவாதல்‌ மற்றும்‌ மண் வளப்பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்தார்‌.

இதனையடுத்து மண்/எரியல்‌ மற்றும்‌ வேளாணர்‌ வேதியியல்‌ துறை இணைப்பேராசிரியர்‌ முனைவர்‌. ப. மாலதி பேசியதாவது, ஒருங்கிணைந்த பயிர்‌ ஊட்டச்சத்து முறையில்‌ மண்‌ வளம்‌ மற்றும்‌ மகசூல்‌ இலக்கிற்கேற்ப பயிர்‌ சத்து மேலாண்மை பற்றி விளக்கம்‌ அளித்தார்‌.

தொடர்ந்து பேசிய உதவிப்‌ பேராசிரியர்‌ முனைவர்‌. இரா. இராஜேஸ்வரி ஒருங்கிணைந்த உரப்பரிந்துரைக்கான முடிவு காண துணை மென்பொருள்‌ (டெசிபா) பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்‌.

மேலும் பயிர்க்‌ கழிவுகளின்‌ மறுசுழற்சி மூலம்‌ மண் வளப்பாதுகாப்பு பற்றி இணைப்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ வி.தவமணி வலியுறுத்தினார்‌.

இதில்‌, மண்‌எரியல்‌ மற்றும்‌ வேளாண்‌ வேதியியல்‌ துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, முனைவர்‌ அர.சாந்தி சாடிவயல்பதி கிராம விவசாய நிலங்களின்‌ மண்வளம்‌ பற்றியும்‌ மண்‌ வளத்திற்கும்‌ மகசூல்‌ இலக்கிற்கும்‌ ஏற்ப பயிர்ச்சத்து மேலாண்மையை கடைபிடிப்பதால்‌ மண்வளம்‌ பாதுகாக்கப்படும்‌ என்றும்‌ எடுத்துரைத்தார்‌.

இதில் தலைமை உரையாற்றிய இயற்கை வள மேலாண்மை இயக்கக இயக்குனர்‌ முனைவர்‌ ப. பாலசுப்ரமணியம்‌, மண்வள அட்டையின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கினார்‌. மேலும்‌ பல்வேறு தொழில்நுட்ப உத்திகள்‌ மூலம்‌ மண் வளத்தைப்‌ பாதுகாப்பது பற்றியும்‌ எடுத்துரைத்தார்‌.

இப்பயிற்சியின்‌ அங்கமாக மண் ஆய்வு மற்றும்‌ பயிர்‌ ஏற்புத்திறன் தொடர்பளவுத்‌ திட்டத்தின்‌ தொழில்நுட்பங்கள்‌ என்ற தலைப்பில்‌ கருத்துக்‌ கண்காட்சியும்‌ ஏற்பாடு செய்யப்பட்டது.

நிறைவாக இணைப்‌ பேராசிரியர்‌ முனைவர்‌. ப. மாலதி நன்றியுரை ஆற்றினார்‌. இந்த பயிற்சியில்‌ 44 உழவர்‌ பெருமக்கள்‌ பங்கேற்று கலந்துரையாடி பயனடைந்தனர்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter