கோவை வேளாண் பல்கலை.யில் வேளாண்‌ வளர்ச்சிக்கான உலகளாவிய மேம்பாடு குறித்த பன்னாட்டு பயிற்சி முகாம்

டிச.5 முதல் டிச.16 வரை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ நடைபெறவுள்ள வேளாண்‌ வளர்ச்சிக்கான உலகளாவிய மேம்பாடு குறித்த பன்னாட்டு பயிற்சி முகாமில் கனடா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.


கோவை: வேளாண்‌ வளர்ச்சிக்கான உலகளாவிய மேம்பாடு குறித்த பன்னாட்டு பயிற்சி முகாம்‌ கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இது தொடர்பாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்‌ நலமையம்‌ மற்றும்‌ டல்ஹெசி பல்கலைக்கழகம்‌, ஹாலிபேக்ஸ்‌, கனடா இணைந்து ஆப்பிரிக்கா உகாண்டாவில்‌ வேளாண்மை பயிற்றுவிப்பாளர்களாக ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வேளாண்‌ வளர்ச்சிக்கான உலகளாவிய மேம்பாடு குறித்த பன்னாட்டு பயிற்சி முகாம்‌ டிசம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பயிற்சியின்‌ துவக்க விழாவில், பயிற்சி முகாமினை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவா்‌. வெ.கீதாலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.



இதனையடுத்து தலைமையுரையாற்றிய அவர் பேசியதாவது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்று வரும்‌ ஆராய்ச்சி மற்றும்‌ தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தினர். பயிற்சியாளர்கள்‌ பல்கலைக்கழகத்தில்‌ வழங்கப்படுகின்ற தொழில்நுட்ப அறிவை சரியான வழியில்‌ பயன்படுத்தி விவசாயிகளின்‌ முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இதனையடுத்து, பயிற்சி குறித்து விளக்கம்‌ அளித்த கனடாவின்‌ திட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர்‌ முனைவா்‌. டேவிட்‌ பாக்ஸ் பேசியதாவது, புக்கால்சா வேளாண்மை கல்லூரி, ரேவன்டங்கா பண்ணை நிலையம்‌, சிசி பண்ணை நிலையம்‌ மற்றும்‌ கேபராம்மேய்டோ தொழில்நுட்ப நிலையம்,‌ உகாண்டாவில்‌ இருந்து 23 பயிற்சியாளர்கள்‌ இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.

டல்ஹெசி பல்கலைக்கழகம்‌ கனடாவில்‌ இருந்து 2 பேராசிரியர்களும்‌ இப்பயிற்சியில்‌ கலந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக மாணவா்‌ நலமைய முதன்மையர்‌ முனைவா்‌ மரகதம்‌ வரவேற்புரை ஆற்றினார்‌. பேராசிரியர் முனைவர். ரா. பிரேமாவதி நன்றியுரை வழங்கினார்.



இவ்விழாவில்‌ பயிர்‌ மேலாண்மை, பயிர்‌ பாதுகாப்பு மையம்‌, வேளாண்‌ விரிவாக்கம்‌ மற்றும்‌ வேளாண்‌ வணிக மேலாண்மை இயக்குநர்கள்‌ கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter