மண் ஊட்டச்சத்து இழப்பு என்பது மண்‌ சிதைவின்‌ ஆரம்பம் -‌ எச்சரிக்கும் கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர் கீதாலட்சுமி

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முனைவர்‌ பி.ராமமூர்த்தியின் 11வது நினைவு விரிவுரை நிகழ்வில் மாணவர்களுக்கு நிலத்தை பாதுகாப்பது குறித்த அறிவுரைகளை துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் வழங்கினர்.


கோவை: உலக மண் தினத்தை முன்னிட்டு இன்று (05.12.2022) தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின்‌ மண்ணியல்‌ மற்றும்‌ வேளாண்‌ வேதியியல்‌ துறையில்‌ முனைவர்‌ பி.ராமமூர்த்தியின் 11-வது நினைவு விரிவுரை, பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின்‌ மண்ணியல்‌ மற்றும்‌ வேளாண்‌ வேதியியல்‌ துறை பேராசிரியார மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ சாந்தி வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, மண்‌ வள ஆராய்ச்சியில்‌ முனைவர்‌ பி.ராமமூர்த்தி அவர்களின்‌ பங்களிப்பு பற்றி எடுத்துரைத்தார்‌.

வேளாண் பல்கலைக்கழக மாணவர்‌ நலமையம்‌ முதன்மையர்‌ முனைவர்‌ நா.மரகதம் தனது உரையில்‌ மண்‌ வளம்‌ மற்றும்‌ பயிரின்‌ தேவைக்கேற்ற உரப்பரிந்துரையின்‌ முக்கியத்துவத்தை குறித்து தெரிவித்தார்.



இந்த நிகழ்வில் தலைமை உரையாற்றிய வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி பேசியதாவது, மண் ஊட்டச்சத்து இழப்பானது, ஒரு பெரிய மண்‌ சிதைவு செயல் முறையாகும்‌ என்று எடுத்துரைத்து, உலகளவில்‌ உணவுப்‌ பாதுகாப்புக்கு மிக முக்கியமான பிரச்சனையாக கருதப்படுகிறது.

மேலும்‌ 2022 உலக மண் தினத்தின்‌ கருத்துரு “மண் உணவு தோன்றுமிடம்‌'” என்பது பற்றி குறிப்பிட்டார்‌, இந்த தினமானது விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது‌. அதுமட்டுமல்லாமல்‌ நம்‌ முன்னோர்களிடம் இருந்து கிடைத்த மண்ணை நம்‌ இளைய தலைமுறையிடம்‌ அதே வளத்தோடு ஒப்படைக்க வேண்டும்‌.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து, மண் மற்றும்‌ பயிர்‌ மேலாண்மை மையத்தின் முன்னாள் இயக்குனர் முனைவர்‌ வே. முருகப்பன்‌ “தமிழ்நாடு மண்‌ வள மேலாண்மையின்‌ கருத்தியல்‌ கட்டமைப்பு - வெற்றிகளை வலுப்படுத்தவும்‌ மற்றும்‌ தோல்விகளை சரி செய்யவும்‌ கதைகளை உருவாக்குதல்‌” என்ற தலைப்பில்‌ உரையாற்றினார்‌.

அவர்‌ தனது விரிவுரையில் பேசியதாவது,‌ தமிழ்நாடு மற்றும்‌ இந்தியாவிலுள்ள மண்‌ வளத்தின்‌ தற்போதைய நிலை மற்றும்‌ மண்‌ பரிசோதனை முறைகளின்‌ முன்னேற்றம்‌ ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தார்‌. மேலும்‌ வேளாண்‌ சூழல்‌ மண்டலங்களின்‌ அடிப்படையில்‌ உர பரிந்துரைகள்‌ வழங்குவதின்‌ முக்கியத்துவம்‌ பற்றி கூறினார்.



இந்நிகழ்ச்சியில்‌ அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம்‌ நீண்டகால உரப்பரிசோதனைகள்‌ என்ற புத்தகத்தை துணைவேந்தர்‌ வெளியிட்டு, 2022 உலக மண் தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில்‌ பரிசு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும்‌ வழங்கினார்‌.

முன்னதாக உலக மண் தினம்‌ 2022 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, “இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின்‌ முதுகலை மற்றும்‌ முனைவர்‌ பட்ட மாணவர்களின்‌ பேரணி” மண்ணியல்‌ மற்றும்‌ வேளாண்‌ வேதியியல்‌ துறையின்‌ மூலம்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக வளாகத்தில்‌ நடத்தப்பட்டது.

இந்த பேரணியை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌, கீதாலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்‌. மேலும்‌ “பாதுகாப்பாக பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு பயிற்சி” கார்டிவா அக்ரிசைனஸ்‌ இந்தியா பிரைவேட்‌ லிமிடெட்‌, தெலுங்கானா உடன்‌ இணைந்து நடத்தப்பட்டது.

இதில்‌ இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின்‌ விஞ்ஞானிகள்‌, முதுகலை மற்றும்‌ முனைவர்‌ பட்ட மாணவர்கள்‌ பங்கேற்றனர்‌. இந்நினைவு விரிவுரையின்‌ இறுதியில்‌ மண்ணியல்‌ துறையின்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ ர. சண்முகசுந்தரம்‌ நன்றியுரை வழங்கினார்‌.

Newsletter