சம்பா பயிர் காப்பீடு செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

சேத்துப்பட்டு வேளாண்மை வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சம்பா பயிர் காப்பீடு செலுத்த அரசு கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளது.  இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த வரலாறு காணாத மழை பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும், தமிழகம் முழுவதும் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர், கரும்பு, பயறு வகைகள் சேதமடைந்தன.

இதையடுத்து மத்திய, மாநில அரசால் சேதமடைந்த விவரத்தை வேளாண்மை துறை சார்பில் கணக்கிட்டு சேதத்துக்குத் தகுந்தவாறு நிவாரணம் விவசாயிகளுக்கு அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டது.  இந்நிலையில், இந்தாண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அந்தந்த பகுதி வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளிடம் ஓர் ஏக்கருக்கு ரூ.330 காப்பீடு செலுத்த வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, சேத்துப்பட்டு வேளாண்மை வட்டாரத்தைச் சேர்ந்த ஆத்துரை, தச்சாம்பாடி, மண்டகொளத்தூர், சேத்துப்பட்டு, வடமாதிமங்கலம், மொடையூர் என 6 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சம்பா பயிர் காப்பீடு செலுத்த அப்பகுதி விவசாயிகள் குவிந்து வருகின்றனர்.

இதற்கிடையே, காப்பீடு செலுத்தும் காலம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குநர் ரமணன் கூறியது: மழையால் விவசாயிகளின் சம்பா பயிர் சேதமடைந்தால் ஒரு ஏக்கருக்கு ரூ.330 காப்பீடு செய்தால் இழப்பீடாக ரூ.22 ஆயிரம் அரசால் வழங்கப்படும்.

மேலும், அக்.14, 15 என 2 நாள்களுக்குள் விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த காலநிலை நவ.30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், கரும்பு, பயறு வகைகளுக்கு காப்பீடு செய்ய உத்தரவு வரவில்லை. தகவல் வந்தால் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

Newsletter