கோவையில் நடைபெற்ற வேளாண் பொறியியல் தொடர்பான மூன்று நாள் கருத்தரங்கில் நாடு முழுவதிலுமிருந்தும் வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்

கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் வேளாண் பொறியியல் தொடர்பான மூன்று நாள் கருத்தரங்கில் இந்திய உணவு பாதுகாப்பு மட்டுமின்றி சர்வதேச உணவு பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக கருத்தரங்க விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தலைவர் அறிவித்தார்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் "உலகளாவிய உணவு பாதுகாப்பிற்கான வேளாண் பொறியியலில் புதுமை" என்ற தலைப்பில் இந்திய வேளாண் பொறியாளர் சங்கத்தின் 56வது வருடாந்திர மாநாடு மற்றும் " இந்தியா 2047 வேளாண் பொறியியல் கண்ணோட்டம் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தலைவர் சியாம் நாராயண் ஜா மற்றும் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய துணைவேந்தர் கீதாலட்சுமி, இக்கருத்தரங்கில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்கா, கனடா நாடுகளை சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர் என்றும் பல்வேறு காலநிலை சூழலுக்கு ஏற்றவாறு வேளாண் இயந்திரங்கள் கண்டுபிடிப்பு குறித்தும் அனைத்து விதமான பயிர்களுக்கான இயந்திர தயாரிப்பு குறித்தும் இதில் விவாதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் இறுதி வடிவம் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறியதுடன் இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இயற்கை விவசாயம் செய்யும் போது ஆரம்பகட்ட பொருளாதார சிக்கலை குறைக்க அரசுக்கு தெரிவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.



மேலும் விவசாயத்தில் நானோ தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் விவசாயிகள் மத்தியில் தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என கூறிய துணைவேந்தர் கீதாலட்சுமி, நானோ தொழில்நுட்பத்தில் உரம் மற்றும் விதைகள் தற்போது சந்தைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தலைவர்ஷியாம் நாராயண் ஜா இந்திய வேளாண் பொறியாளர் சங்கத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மட்டுமின்றி சர்வதேச உணவு பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக இக்கருத்தரங்கில் விவாதங்கள் முன்னெடுக்கப்படுகிறது என்றும் கூறினார்.

கடந்த ஓராண்டில் புதிய ஆராய்ச்சிகள் குறித்த விஷயங்கள் கருத்தரங்கில் பரிமாறப்படுகிறது எனவும் உணவு தானிய உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்தாலும், ஊட்டச்சத்து உணவு வழங்குவதில் தன்னிறைவு அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.

Newsletter